தென்னகத்தின் சண்டிகராக மாறி வருகிறதா மதுரை..!

தென்னகத்தின் சண்டிகராக மாறி வருகிறதா மதுரை..!

இந்திய காவல்துறையில் ஐபிஎஸ் உயர்காவல்துறை அதிகாரியான தந்தையின் வழியில் வேகமும், விவேகமும் எடுத்த காரியத்தைச் உடனடியாக செய்துமுடிக்கும் ஆற்றலோடு, மிடுக்கான தோற்றத்துடன் இளம் வயதிலேயே மதுரை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வரும் திரு. சந்தீப் நந்தூரி அவர்களை அட்வென்சருக்காக சந்தித்தோம்.

மக்களின் தேவை ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்துவரும் இன்றைய நாட்களில், ஒரு நகராட்சியோ அல்லது மாநகராட்சியோ மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய தேவைகளின் எல்லையும் விரிந்துகொண்டே செல்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஒரு நகரத்தை பொறுத்தமட்டில் கட்டிட பணிகளுக்கான ஒப்புதல்கள் அளித்தல், சுத்தம் சுகாதாரம் மற்றும் அடிப்படை சமூக வாழ்வதாரத்திற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சியின் தலையாய கடமையாகும்.

பெங்களூருவில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டமும் எம்பிஏ பட்டமும் பெற்ற, 2009ம் ஆண்டில் இந்திய ஆட்சி பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று மதுரை மாநகராட்சியின் தற்போதைய மதுரை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார் திரு. சந்தீப் நந்தூரி, IAS.,

* தங்களின் பார்வையில் மதுரை எப்படியிருக்கின்றது?

மதுரை கோயில்கள் நிறையப் பெற்ற, வைகை ஆற்றை தன்னகத்தே கொண்ட ஒரு நல்ல சுறுசுறுப்பான நகரமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு தேவைப்படுகின்ற வசதிகளை மதுரை மாநகராட்சி செய்து கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளது. நான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து மதுரை மாநகரை பெரிதும் விரும்பி, அந்நகர மக்களுக்கு தேவையானவற்றை மகிழ்ச்சியோடு செய்துவருகின்றேன்.

* மதுரையை தூய்மை நகரமாக மாற்றுவதற்கு என்னென்ன விசேஷ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?

மிகப் பெரிய விஸ்தீகரண முடைய மதுரை மாநகரத்திற்கு செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது மதுரையை தூய்மைப்படுத்துவது தான். மதுரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய பண்பாடு களை உடைய நகரமாகும். இப்போது வளர்ந்துவரும் நாகரீகத்திற்கு ஏற்றவாறும் பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்றவாறும் சுத்தமும் சுகாதரமும் முழுமை பெற்று விளங்கிட பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரின் பகுதிகளில் குப்பைகளும், கழிவு நீர் வெளியேற்றமும் சாலைகளை ஆக்கிரமித்துக் கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தூய்மை மதுரை திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக, மதுரையின் சில முக்கியமான பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒருபகுதியாக ரேஸ்கோர்ஸ் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுவர்களில் மதுரையின் பாரம்பரியத்தை விளக்குகின்ற வகையில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு சாதாரணமாக இந்த சுவர்களில் கட்சிகளின் விளம்பர விஷயங்களே இடம் பெற்று வந்தன. இவற்றை இப்போது மதுரைவாசிகள் கண்டுகளிப்புறும் வகையில் ஓவியமயமாக்கி வருகின்றோம். மதுரையின் இன்னும் பல முக்கியமான சாலைகளின் ஓரங்களில் உள்ள சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மதுரைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மதுரையின் ஆன்மீக மற்றும் பாரம்பரிய வரலாறுகள் தெரிய வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அத்துடன் சுவர்கள் நல்ல ஒவியங்களுடன் காண்போரின் கண்களுக்கு விருந்தாய் காட்சி தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

* மதுரை மாநகரம் வட இந்தியாவின் சண்டிகார் நகரத்தைப் போல் குப்பையில்லா நகரமாக (Litter Free City) உருவாக்கப்பட முடியுமா? இதில் உங்களு க்கு நம்பிக்கை உள்ளதா?

மதுரையைத் தூய்மை நகரமாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்துவித முயற்சிகளும் செய்யப்பட்டுத்தான் வருகின்றது. மதுரையை குப்பையில்லா நகரமான சண்டிகார் நகரத்தைப் போல் ஆக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயமே. இதை உடனடியாக செய்து முடிக்க முடியாவிட்டாலும், படிப்படியாக தேவையான முயற்சிகளை மேற்கொண்டு மதுரையை தென்னகத்தின் சண்டிகராக மாற்றமுடியும் என்பதில் எனக்கு மனப்பூர்வமான நம்பிக்கையிருக்கின்றது. இந்த அரிய முயற்சியில் மதுரை மாநகர மக்களின் ஒத்துழைப்பும் மிகப்பெரிய அளவிலே இருந்தேயாக வேண்டும். ஏனென்றால் இருகை தட்டினால் மட்டுமே ஓசை வரும் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே.

மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை வேறு விஸ்தீகரமான வசதியான இடத்திற்கு மாற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இது விரைவில் நிறைவேற்றப்ப டும் என நம்புகிறேன். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை பொறுத்தளவில், ஏற்கனவே தேவைப்படும் நடவடிக்கைகளை அதனை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்கள் வீடு கட்டுவதற்கான Plan approval அதிகபட்சம் 30 நாட்களுக்கு முன்பாக அங்கீகரித்து கொடுக்கும்படி நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சியின் மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

* தனிப்பட்ட மற்றும் விசேஷ வசதியாக கருதப்படும் “Swachhata” apps- யைப் பற்றி கொஞ்சம் விரி வாக சொல்லுங்களேன்

Swachhata என்பது பொதுமக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரத்தியேக apps ஆகும். மதுரை மாநகராட்சியில் எந்த ஒரு பகுதியில் எந்தவொரு பிரச்சினையும் மாநகர மக்களால் எதிர்கொள்ள நேர்ந்தால் அதனை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு இந்த apps-ன் மூலம் தெரியப்படுத்தி உரிய நிவர்த்திக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த apps-ன் மூலமாக பெறப்படும் எந்தவொரு புகாருக்கும், மாநகராட்சியும் உடனடியான உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உறுதி பூண்டு உள்ளது. இந்த வகையில் Swachhata apps-ஆனது மதுரை மாநகர மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

* “டிஜிட்டல் இந்தியா அவார்ட்” பெற்ற அனுபவம்...

Swachhata என்னும் apps மதுரை மக்களின் நலனுக்காக உருவாக்கப்படுவதில் நான் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளேன். அதன் பொருட்டு கிடைக்கப்பெற்ற டிஜிட்டல் இந்தியா அவார்ட் என்பது மத்திய அரசினால் எனக்கு வழங்கப்பட்ட விருதாகும். ஒரு பொதுகாரியத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட நல்லதொரு சாதனமாகவே இதனை நான் கருதுகிறேன். நீங்கள் சொன்னதைப் போல் இதற்காக எனக்கு கிடைத்துள்ள டிஜிட்டல் இந்தியா விருதானது எனக்கும் மதுரை மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விருதாகவே நான் கருதுகின்றேன். இதனை நல்லவிதமாக மதுரை மாநகரின் மக்களுக்காக பரந்த அளவில் பயன்படுத்துவதே என்னுடைய தலையாய சிந்தனையாக தற்போது இருந்து வருகின்றது.

* பசுமை மதுரையாக்க உங்கள் திட்டம்?

மதுரை மாநகரத்தைப் பொறுத்தளவில் என் மனதில் நிறைந்துள்ள முக்கியமான தொரு விஷயமாகும் இது. மதுரை நகரத்தை பசுமை நகரமாக மாற்றும் எத்தனிப்பில் முதன்மையாக ஒரு விஷயத்தை கையில் எடுக்க எண்ணியுள்ளோம். அதாவது மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 250 பூங்காக்கள் உள்ளன. இவற்றிற்கு குறுகிய காலத்தில் புத்துயிர் அளித்து நிறைய மரங்களையும் செடி கொடிகளையும், பெங்களூரின் கபன்பாக் மற்றும் லால்பாக்கைப் போல் மாற்றியமைக்க எண்ணியிருக்கின்றோம். இதன் மூலமாக மதுரை மற்றும் சுற்று வட்டாரஙக்ளில் இயற்கையாகவே பூங்காக்களின் மூலமாக பசுமை நிறைந்து காணப்படும் சந்தர்ப்பம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு அடுத்தபடியாக மதுரையின் சாலையோரங்களில் நிறைந்த அளவில் நிழல் தரும் மரங்களையும் நடதிட்டமிட்டு உள்ளோம்.

* தெருநாய்களின் கட்டுப்பாட்டிற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து…

தற்போது மதுரையில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது உண்மை தான். தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சியின் மூலமாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைப் பிடித்துச்சென்று கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டு மீண்டும் அவை ஏற்கனவே இருந்த இடத்திலேயே விடப்படுகின்றன. மிருக பாதுகாப்பு சட்டத்தின் படி, நாய்களை கருத்தடை சிகிச்சைக்குபின் அதே இடத்தில் கண்டிப்பாகவிட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. எனவே நாய்களை ஒரு இடத்திலிருந்து எடுத்துச்சென்று முற்றிலும் அழிப்பதற்கு முடியாது. மிக கடுமையான நோய் தாக்கப்பட்ட வெறி நாய்களை மட்டுமே “இரக்க கொலை” என்னும் அடிப்படையில் ஊசி போட்டு கொல்வதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே பொதுமக்கள் நினைப்பது போல், மிக குறைந்த கால அவகாசத்தில் தெருநாய்களை முற்றிலும் அழிப்பது கடினமாகும்.

* மதுரை மாநகராட்சியைப் பொறுத்தமட்டில், ஆணையாளர் என்ற முறையில் தங்களின் தொலைநோக்கு திட்டங்கள் எவை?

ஏற்கனவே அரசு உத்தர வின்படி மாநகராட்சி சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சீமைக்கருவேலம் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றது. தனிப்பட்ட நிலச்சுவான்தார்களை தங்களின் இடத்திலுள்ள கருவேல மரங்களை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்பால் கருவேலமரங்கள் முற்றிலும் அழிக்கப்படும். மதுரையில் நிறைய தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டமும், மதுரையில் குடிதண்ணீர் பற்றாக்குறை கொஞ்சமும் இல்லாத அளவில் மதுரையை நீர்தன்னிறைவு நகரமாக ஆக்குவதற்கும் தொலை நோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tags: News, Hero, Madurai News, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top