எளிமையாக்கப்பட்ட ‘பாஸ்போர்ட்’ நடைமுறைகள்!

எளிமையாக்கப்பட்ட ‘பாஸ்போர்ட்’ நடைமுறைகள்!

 உலகமயமாக்கல் என்ற அம்சம் இந்தியா மட்டுமன்றி உலகநாடுகள் எங்கும் பரவிவிட்டது. நம் மதுரையை எடுத்துக் கொள்ளுங்களேன். மதுரையில் இயங்கும் ஒரு சில கல்லூரிகளின் மாணவர்கள், தமது கல்வியின் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறார்கள். அண்டை நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாரத்துக்கு ஒரு நாடு என்று கூடச் சென்று வருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் செல்போனுக்கு நிகராக பாஸ்போர்ட்டும் அவசியம் என்ற ஒரு நிலை உருவாகிவருகிறது. பாஸ்போர்ட் பற்றிய முக்கிய விபரங்களை எடுத்துரைக்கிறார் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் திரு.எஸ்.மணீஸ்வர ராஜா.

இப்பொழுது பாஸ்போர்ட் எடுப்பதற்கான அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படுகின்றன.  இப்பொழுது மிக அதிகமாக விண்ணப்பங்கள் வருகின்றன. ஒரு காலத்தில் சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்த்திலிருந்த செல்வந்தர்களும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்களும், தொழில் வியாபாரத்தில் பிரபலம் அடைந்திருந்தவர்கள் ஆகியோர் மட்டுமே வெளிநாடுகளுக்கும் சென்று வருவது வழக்கமாக இருந்தது. மற்றவர்கள் விமானத்தில் பறந்து வெளிநாடு செல்வதே ஒரு அபூர்வ நிகழ்வாகவும் இருந்தது.
கால மாற்றங்கள் தந்திருக்கின்ற காரணங்களினால் வியாபாரம், தொழில், சுற்றுலா, கல்வி, மருத்துவம், கலை நிகழ்ச்சிகள், விருதுகள் பெறுதல், விஞ்ஞான மற்றும் இதர மாநாடுகளில் கலந்து கொள்ளுதல் ஆகிய பலதரப்பட்ட காரணங்களை முன்னிட்டு சாதாரண மக்களும் கூட பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணமாகி விடுகின்றார்கள்.

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் யாவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே இப்போது பெறப்படுகின்றன. பாஸ்போர்ட் அலு வலகங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இந்த விஷயத்தில் இருந்து வந்த தனியார் இடைத்தரகர்கள் அல்லது முகவர்கள் தவிர்க்கப்பட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு பொது சேவை மையம் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இயங்குவதற்கு அனுமதிக் கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

சாதாரணமாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அதிகபட்ச கால அவகாசமான மூன்று வாரங்களுக்குள்ளாகவோ அல்லது அதைவிட சற்று முன்பாகவோ விண்ணப்பித்தவர் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். 
வழிமுறைகள் எளிது என்றாலும் விதிமுறைகள் கடுமையானவைதாம். ஏனென்றால், பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான குடியுரிமை சான்றுக்கான ஆதாரம். எனவே இதை வினியோகிப்பதற்கு முன்பாக அரசின் விதிமுறைகள் மிக கடுமையாக அனுசரிக்கப்படுகின்றன.

முன்பு பாஸ்போர்ட் எடுப்பதற்காக திருச்சிக்கோ அல்லது சென்னைக்கோ சென்று கொண்டிருந்த விண்ணப்பதாரர்கள் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை மற்றும் திருநெல்வேலி பாஸ்போர்ட் அலுவலகங்களில் பதிவு செய்யும் வசதியைப் பெற்றுள்ளார்கள். பாஸ்போர்ட் எடுப்பதற்கு ஒருவருக்கு தேவைப்படுகின்ற அடிப்படை ஆவணமாக இருப்பது, அவர் ஒரு இந்திய பிரஜை தான் என்று நிரூபிக்கும் ஆவணமாகும். ஒரு இந்திய பிரஜையாக இல்லாத பட்சத்தில் எந்த ஒரு நபரும் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணபிக்க முடியாது. பாஸ்போர்ட் அலுவலகத்தால் சொல்லப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பதாரரின் வசிப்பிட ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் வசிப்பிட சான்றுக்கான ஆதாரங்களாக சமர்ப்பிக்க வேண்டியவை
1. குடிநீர் ரசீது
2. மின்கட்டண ரசீது
3. தொலைபேசி தரை வழி அல்லது மாதாந்திர கைபேசி ரசீது
4. பொது துறை / தனியார் / மண்டல ஊரக வங்கிகளின் வங்கி கணக்கு புத்தகம்
5. வருமான மதிப்பீட்டு ஆணை
6. வாக்காளர் புகைப்பட அட்டை
7. சமையல் எரிவாயு இணைப்பு ஆணை
8. வேலை பார்க்கும் பெயர் பெற்ற நிறுவனங்கள் வழங்கிய இருப்பிடச் சான்றிதழ் (முகவரி அடங்கிய கடிதத் தாளில்)
9. தற்போதைய விலாசம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய கணவன் / மனைவி பாஸ்போர்ட் நகலில் முதல் மற்றும் கடைசி பக்கம் (தற்போது தங்கியிருக்கும் விலாசமும் கணவன் / மனைவி பாஸ்போர்ட்டில் உள்ள விலாசமும் ஒன்றாக இருத்தல் வேண்டும்)
10. இருகாறும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட குடும்ப அட்டை தற்போது பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளது
11. மைனர் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் நகலில் முதல் மற்றும் கடைசி பக்கம்
12. ஆதார் அட்டை
13. பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம்

எளிமையாக்கப்பட்ட பாஸ்போர்ட் வழங்கு நடைமுறைகளின் கீழ் மேற்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும் அத்துடன் பிறப்புச் சான்றிதழையும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். 26.01.1989ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து பிறப்புச்சான்றிதழ் பெற்று வழங்கலாம்.

எது எப்படியாயினும் 26.01.1989-ம் தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் பாஸ் போர்ட் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பம் சமர்பித்த பின்பு, பாஸ்போர்ட் அலுவலகங்களில் தற்போது இடம் பெற்றுள்ள மூன்று விதமான A, B மற்றும் C அலுவலக பிரிவுகளில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஆவன செய்யப்படுகின்றன. A பிரிவில் விண்ணப்பதாரரின் அனைத்து சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு திருப்பி வழங்கப்பட்டு விடுகின்றன. B பிரிவில் விண்ணப்பதாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்று சரி பார்க்கப்படுகின்றன. சC பிரிவில் விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் மூன்று நாட்களிலும், புதிய பாஸ்போர்ட் 21 நாட்கள் முன்பாகவும் தட்கல் முறையிலான பாஸ்போர்ட் மூன்று நாட்களிலும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. தட்கல் முறையிலான பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்கும் போது ரூ.3500 கட்டணமாகவும், ஆதார் அட்டை, வேட்பாளர் அடையாள அட்டை மற்றும் பேன் கார்டு முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சாதாரண முறையில் விண்ணபிக்கும் போது பாஸ்போர்ட் கட்டணமாக ரூ.1500 மட்டும் செலுத்தினால் போதும்.

அரசு அலுவலகர்கள் அரசின் வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெள்ளை நிற இலவச பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. அதே போல அரசாங்கத்திலிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் தூதரக அதிகாரிகளுக்கும் மெரூன் கலர் பாஸ்போர்ட் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒருவர் இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அதற்கு முந்திய ஓராண்டு காலத்திற்கு வசிக்கின்ற விலாசங்களுக்கான ஆதாரங்களை இதர ஆவணங்களுடன் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். 
பாஸ்போர்ட் வழங்குவதில் மூத்த குடிமக்களுக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கும் “S” டோக்கன் என்பதான ஒரு டோக்கன் வழங்கப்படுகின்றது. இதன் மூலமாக அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் கால அவகாசம் குறைக்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மற்றபடி இவர்களுக்கு கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் பத்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். அதே சமயம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டுகள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத் தக்கதாகும். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ளவர்கள் மற்றும் இதர குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படமாட்டாது.

முன்னதாக அரசாங்க துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் போது சம்பந்தப்பட்ட துறையிலிருந்து ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழை (NOC) சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இப்போது இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு துறை உயர் அதிகாரிகளிடமிருந்து பிரயர் இன்டிமேஷன் லெட்டர் எனப்படுகின்ற முன் அறிவிப்பு கடிதம் ஒன்றினை பெற்று சமர்ப்பித்தால் போதுமானதாகும். கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மற்ற இதர அவசர காரணத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்புவோர் அவசர காரணம் கருதி முறையாக விண்ணப்பிக்கப்படும் பாஸ்போர்ட்டுகள் மிக குறைந்த கால அவகாசமான மூன்று நாட்களில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பாஸ்போர்ட் தொலைந்து போன இடத்தில் உள்ள காவல்நிலையத்தில் உடனடியாக விபரங்களுடன் புகார் அளிக்க வேண்டும். பாஸ்போர்ட் மீண்டும் கிடைக்காத பட்சத்தில் FIR பதிவு செய்து அதன் நகலுடன் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது அவருக்கு பரிசீலனை செய்து புதியதாக ஒரு பாஸ்போர்ட் வழங்கப்படும். வசிப்பிட காவல்துறை சரிபார்ப்பு அதே நடைமுறையில் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் சரிபார்ப்பானது துரிதப்படுத்தப்பட்டு காவல் துறையிலிருந்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கால விரயம் தவிர்க்கப்படுகின்றது.
மேலும் விபரங்களுக்கு:
Public Enquiry: 0452 2520795, 2521204, 2521205
Email Id: rpo.madurai@mea.gov.in
Whatspp Number: 8870131225

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top