எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை - சபாநாயகர் ஓம் பிர்லா!

எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை - சபாநாயகர் ஓம் பிர்லா!

நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பேச பயன்படுத்தும் வார்த்தைகள் எதையும் தடை செய்யவில்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் திங்கள் கிழமை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், தகாத வார்த்தைகள் என நாடாளுமன்றம் கருதும் வார்த்தைகளின் பட்டியலை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டது.
 
மத்திய அரசை விமர்சிக்கப் பயன்படுத்தும் பல்வேறு வார்த்தைகள் இதில் தடை செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
 
புதிய இந்தியாவுக்கான புதிய அகராதி இது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இதனை கேலி செய்திருந்தார்.
 
இந்த வார்த்தைகள் தடை செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத்தில் தான் பேசப் போவதாக தெரிவித்த மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரேக் ஓ ப்ரீன், முடிந்தால் தன்னை இடைநீக்கம் செய்யட்டும் என சவால் விடுத்தார்.
 
நரேந்திர மோடி அரசின் செயல்பாடு குறித்து தெரிவிக்கவே எதிர்க்கட்சிகள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன என தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், இவை தகாத வார்த்தைகள் என்றால் அடுத்தது என்ன விஸ்வ குரு என கேலியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
 
எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை அடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
 
நாடாளுமன்றத்தில் பேசும்போது தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளின் பட்டியல் புத்தகமாக வெளியிடப்படுவது வழக்கம் என தெரிவித்துள்ள அவர், காகிதம் வீணாவதை தவிர்க்க இம்முறை அவை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறினார்.
 
எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை என்றும் ஒருவேளை உறுப்பினர்கள் பேசினால், அது அவை குறிப்பில் இருந்து அகற்ற மட்டுமே உத்தரவிடப்படும் என்றும் ஓம் பிர்லா விளக்கம் அளித்தார்.
 
இதில், புதிதாக எந்த வார்த்தையும் இணைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள ஓம் பிர்லா, ஏற்கனவே அகற்றப்பட்ட வார்த்தைகள் அப்படியே தொகுக்கப்பட்டுள்ளன என்றார்.
 
நாடாளுமன்றத்தில் தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளின் தொகுப்பு 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் புத்தகமாக வெளியிடப்பட்டதாகத் தெரிவித்த ஓம் பிர்லா, 2010ம் ஆண்டில் இருந்து இது ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.
 
தற்போது தொகுக்கப்பட்டுள்ள 1100 பக்கங்கள் கொண்ட அகராதியை முழுவதுமாக படித்திருந்தால், யாரும் தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்க மாட்டார்கள் என்றும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top