மதுரை எய்ம்ஸ் : ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு!
Posted on 05/05/2022

மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மிக கடுமையாக எதிரொலித்தது.
குறிப்பாக,திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கடுமையாக கிண்டல் செய்ததோடு மட்டுமல்லாமல்,எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான செங்கலை பிரசாரத்தின்போது கையோடு கொண்டு சென்று மக்களை அவர் வெகுவாக கவர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில்,தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்த திட்ட மதிப்பான ரூ.1977 கோடியில் ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் தற்போது ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் மதுரை எய்ம்ஸ் கட்டப்படும் நிலையில்,மீதி தொகை அக்.26 ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.இதனால்,இனி கட்டுமானப் பணிகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: News