விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி... காளைகள் முட்டியதில் 35 பேர் காயம்!
Posted on 16/03/2022

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 35 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜகிரி குளவாய்பட்டி கூத்தாண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 800-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து, காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை இளைஞர்கள் தீரமுடன் அடக்க முற்பட்டனர். மேலும், சில காளைகள் களத்தில் நின்றவர்களை அச்சுறுத்தியபடி, பிடிபடாமல் சென்றன. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசுகள், சைக்கிள், குத்துவிளக்கு, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த போட்டியை விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Tags: News, Hero