“கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது” ; விஷமக்காரன் விழாவில் இயக்குனர் ஓபன் டாக்

“கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது” ; விஷமக்காரன் விழாவில் இயக்குனர் ஓபன் டாக்

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய  மாற்றத்தை கூட உருவாக்கும். அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
 
விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கும்  இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பியார் பிரேமா காதல் இயக்குனர் இலன்,  'பைனலி' பாரத் மற்றும் நீலு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
 
படத்தொகுப்பாளர் மணிக்குமரன் பேசும்போது, இந்தப்படம் எடுப்பதற்கு முன்னால் இந்த கான்செப்ட் என்னவென்று அவ்வளவாக புரியவில்லை.. ஆனால் படத்தை பார்த்தபோது தான் எல்லோருக்குள்ளும் ஒரு விஷமக்காரன் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன். ஆங்கிலப்படத்துக்கு இணையாக ஒரு புது விஷயத்தை இதில் முயற்சித்திருக்கிறார்கள்.” என கூறினார்.
 
நாயகி அனிகா விக்ரமன் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை குறித்து ஒரு சிறிய பகுதியை தான் கேட்டேன்.. உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தது. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் நன்றாக இருந்தது” என கூறினார்.
 
இன்னொரு நாயகியான சைத்ரா ரெட்டி பேசும்போது, “கதை கேட்கும்போதே புதிதாக இருந்தது.. அதிலும் எனது கதாபாத்திரம் கொஞ்சம் வில்லி போலத்தான் இருக்கும். அது ஒரு சவால் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்” என கூறினார்.
 
படத்தின் நாயகனும் இயக்குனருமான வி (விஜய்) பேசும்போது, “இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளேன். சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே ஏதாவது புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியதுதான் இந்த விஷமக்காரன் படத்தின் கதை. இதில் ஹீரோவாக நடிப்பது சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் ஹீரோவை வைத்து தான் இந்தப்படத்தின் மொத்த கதையுமே நகர்கிறது. அப்போது தான் ஹீரோவாக நடிப்பதன் கஷ்டம் தெரிந்தது.
 
இங்கே சத்யம் தியேட்டரில் இந்த விழாவுக்காக வந்தபோது கூட, கார் பார்க்கிங்கில் ஹீரோ யார் என விசாரித்தார்கள். யாரோ புது ஹீரோ என சொன்னேன்.. உடனே காரை அப்படி  ஓரமா கொண்டுபோய் பார்க் பண்ணுங்க என சொன்னார்கள். ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதைகூட முக்கியமில்லை.. ஹீரோதான் முக்கியம்.. ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்றுதான் சொல்வேன்..
 
இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திரைப்பட நிர்வாகம் மற்றும் உருவாக்கம் தொடர்பான ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரை உருவாக்கினோம். ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்தது.  இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டோம்.  மேலும், இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்க இருக்கிறோம்..
 
முதலில் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் இந்தப்படத்தை உருவாக்கி வந்தோம்.. ஆனால் இந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top