நியூஸ் லைவில் உக்ரைனுக்கு ஆதரவு - ரஷ்ய பெண் ஊழியருக்கு நேர்ந்த கதி?

நியூஸ் லைவில் உக்ரைனுக்கு ஆதரவு - ரஷ்ய பெண் ஊழியருக்கு நேர்ந்த கதி?

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவான கருத்துக்களை நேரலை தொலைகாட்சியில் தெரிவித்ததற்கு அந்நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த பெண் நேரலை செய்தி ஒளிபரப்பின் போது உக்ரைனுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் ஊழியரின் செயலுக்கு ரஷ்ய நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபில்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அபராதம் விதித்தது மட்டுமின்றி பெண் ஊழியரின் நடவடிக்கை அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
 
"சேனல் ஒன் நிறுவனத்தின் ஊழியரான மரினா ஔஸ்னிகோவா போராட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளை மீறி இருக்கிறார் என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது," என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அபராதம் தவிர இந்த பெண்ணிற்கு வேறு எதேனும் நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுத்துள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து அந்த பெண்ணின் வழக்கறிஞர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
 
திங்கள் கிழமை இரவு ஒளிபரப்பான செய்தி நேரலையின் போது சேனல் ஒன் ஊழியர் செய்தி வாசிப்பாளருக்கு பின்னணியில் போருக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய  பதாகையை காட்டினார். இவரின் பதாகையில், "போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். உண்மையற்ற தகவல்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களிடம் பொய்யை கூறி வருகின்றனர்," என குறிப்பிடப்பட்டு இருந்தது. 
 
ரஷ்யா நாட்டு செய்தி நிறுவனங்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை சிறப்பு ராணுவ ஆபரேஷன் என்றே குறிப்பிட்டு வருகிறது. மேலும் போரில் அரங்கேறி வரும் தாக்குதல்கள், பலி எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் உண்மையற்ற தகவல்களை கூறி வருவதாக கூறப்படுகின்றன. 
 
வழக்கு விசாரணைக்கு பின் 14 மணி நேரத்திற்கு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும்,  உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் சட்டப்பூர்வ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என ஔஸ்னிகோவா தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வேறு தகவல்களை கூறும் முன் தனக்கு ஓய்வு மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
இவரது போராட்டம், அந்நாட்டில் உக்ரைனுக்கு ஆதரவாக கருத்துக்களை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யா நாட்டு புது சட்ட விதிகளின் படி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். உக்ரைன் மீதான போர் தொடங்கி எட்டு நாட்கள் கழித்து இந்த சட்டம் இயற்றப்பட்டது. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top