நோ பிளாஸ்டிக்... வாழ்க்கை ஆகிடும் பேன்டாஸ்டிக்!

நோ பிளாஸ்டிக்... வாழ்க்கை ஆகிடும் பேன்டாஸ்டிக்!

‘மிகப்பெரிய மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்தாலும் சரி, வீட்டின் அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கினாலும் சரி, மக்கள் கேட்பது, ‘அண்ணே ஒரு கவர் குடுங்கண்ணே’ என்று தான். இப்படியா ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்தது? இன்று மக்கள் பார்சல் டீ வாங்கினால் கூட பிளாஸ்டிக் பையிலயேதான் வாங்கி செல்கிறார்கள்.

இது புற்றுநோயையே வரவழைக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இன்று பிளாஸ்டிக் பைகளை நாடும் நாம் தான் அன்று கட்டைப்பைகளையும், மஞ்சப்பைகளையும் கூடைகளையும் எடுத்துக்கொண்டு சென்றோம்’ என தன்னுடைய கருத்துப் பதிவுகளுடன் தொடங்குகிறார், திரு. கணேசன் அவர்கள்.

அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரப் பட்டப்படிப்பு, பின் யோகாவில் மேற்படிப்பு இன்று சணல் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு தன்னுடைய நிறுவனத்தின் மூலம் தயார் செய்து உலகளின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சிறிய ஆர்டர் முதல் பெரிய ஆர்டர் வரை செய்துக் கொடுக்கிறார். இருப்பினும், உலகளவில் தேவையாக கருதப்படும் சணல் தயாரிப்புகள் நம்முடைய ஊரைப் பொருத்தளவில் பெரிய அளவிலான வரவேற்பினை பெறவில்லை. இதைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது:

‘சணல் என்பது இந்தியாவின் ஒரு பணப்பயிராக கருதப்படுகிறது. இன்று, உலகளவில் பயன்படுத்தப்படும் சணல் பொருட்கள் பெருவாரியாக இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சணல் இழை சணற்செடியின் தண்டு மற்றும் நாடாப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு, அவற்றின் இழைகள் முதலில் நீரில் நனைத்து மிருதுவாக்கப்படுகின்றன. மிருதுவாக்கும் பணி முடிந்தப்பிறகு அவை உரிக்கப்பட்டு, இழையல்லாத கழிவுகள் அகற்றப்பட்டு சணற்தண்டிலிருந்து இழைகள் சேகரிக்கப்படுகிறது. நம்முடைய இந்தியாவிலிருந்தே 21,40,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

சணல் இழை 100% மக்கும் தன்மையுடன் மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும் உள்ளது. அவற்றின் உயர் விறைப்பான வலு, குறைவான இழுவை இழைகளில் தாக்குப்பிடிக்கும் தன்மையை உறுதியளிக்கிறது. இதனால் வெளிநாடுகளில் சணலால் ஆன தயாரிப்புகளுக்கு மௌசு அதிகம் தான். ஆனால் இன்று நாமோ எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பையை தான் பயன்படுத்துகிறோம். அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒரு வாரம் மட்டும் சேமித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் சேருவது போலத்தான் இந்தியாவில் உள்ள நூறு கோடிக்கும் மேலான மக்களின் வீட்டிலும் சேருகிறது. இவ்வளவு பிளாஸ்டிக் நம்முடைய நாட்டின் வளத்திற்கு மிகப்பெரிய ஒரு கேடு.

நம்மைப் பொருத்தவரையில் சணல் என்பது கோணிப்பையோடு முடிந்துவிடுகிறது. ஆனால் சணல் கொண்டு எவ்வளவோ செய்யக்கூடும். சணல் என்பது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய வரம். இதனை மக்களிடையில் சேர்க்க வேண்டுமென்பதற்காக ஒரு புதிய முயற்சியில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பதாக தொடங்கினேன். முதலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பைகளிலிருந்து தொடங்கி, வாலட் (மணிப்பர்ஸ்), பைஃல்ஸ், ஸ்லிங் பேக்ஸ், கடிகாரம், தோடு, யோகா மேட், மேட் கவர், தலையணை, அழகுக்கு வைக்கப்படும் பொம்மைகள், காலணிகள், ஆபரணங்கள் என இன்று சமீபத்தில் மோடி கோட் வரை தயாரித்து வருகிறோம். இன்று உலகமயமாக்குதலினால் நம்முடைய நாடு வளர்ச்சியின் பாதையில் சென்றாலும், அந்த வளர்ச்சியில் கிடைக்கும் வருமானம் நம்முடைய நாட்டை சேர்கிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. எந்த ஒரு நிறுவனத்தின் கீழும் சாராமல் தாமாக ஒரு தொழில் செய்து வளர வேண்டுமென்கிற இளைஞர்கள், மகளிர் சுயஉதவி குழு, விதவைகள், ஆதரவற்றோர் போன்றவர்களையும் தயாரிப்புப் பணியில் அமர்த்தியுள்ளோம். இந்த தொழிலைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கும் கற்றுத் தருகிறோம்.’ என கூறினார்.

தற்போது மதுரையில் ஜனவரி 1 முதல் மதுரை மாவட்ட ஆணையரால் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாமே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மஞ்சப்பை, கட்டைப்பை போன்றவற்றைதான் அதிகளவில் பயன்படுத்தினோம். இன்று அதை செய்ய ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? பிளாஸ்டிக் இல்லா நகரமாய் மதுரை மட்டுமல்ல, இந்தியாவையே மாற்றுவது நமது கடமையல்லவா.. சிந்திப்போம் செயல்படுவோம்!

தொடர்புக்கு: 9842065482

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top