ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு!

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் உடன் வரும் காலத்தில் கை கோர்க்க வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்,.இதனையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமித்தும் வருகிறார். விரைவில் ஓபிஎஸ்ம் தனது ஆதரவாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக தேனி மாவட்ட செயலாளருமான சையது கான் தேனிக்கு வந்த டிடிவி தினகரனை தேனி மாவட்ட எல்லையில் வரவேற்றார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியினர் டிடிவி தினகரன் அணியோடு இணைந்து செயல்படுவார்கள் என கூறப்பட்டது.
 
இந்த தகவல் பரபரப்புக்கு மத்தியில் ஆங்கில நாளிதழுக்கு டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். அதில், வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்றும் அவருடன் கை கோர்க்க மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்று தெரிவித்தவர், அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவராக உள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு தான் பா.ஜ.க எதிர்க்கட்சி என்றும்,  நிஜத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் எங்களை மதிக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என தெரிவித்த டிடிவி தினகரன், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதே அதிமுக-அமமுக  ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க ஒரு சிலர் விரும்பியதாக தெரிவித்துள்ளார். அப்போது  எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தினாலும் தான் ஏற்க தயார் என தெரிவித்ததாக கூறியிருந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இருந்த போதும்  அதிமுக- அமமுக கூட்டணிக்கு  எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தினகரன் கூறியுள்ளார். இந்தநிலையில் ஓபிஎஸ் உடன் கை கோர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறிய தகவல் இபிஎஸ் அணியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ள நிலையில், தற்போது ஓபிஎஸ்- தினகரன் இணைந்தால் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top