மோடியை கோர்த்துவிட்ட ஓபிஎஸ்... கடுப்பில் டெல்லி?

மோடியை கோர்த்துவிட்ட ஓபிஎஸ்... கடுப்பில் டெல்லி?

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மோடி குறித்து ஓபிஎஸ் பேசியதால் அவர் மீது டெல்லி கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுக்குள் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒற்றை தலைமை பிரச்னைக்கு ஓபிஎஸ் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இரட்டை தலைமையே போதும் என ஓபிஎஸ் பேசினாலும் ஒற்றை தலைமையை நோக்கித்தான் கட்சியை நகர்த்தி செல்வது என இபிஎஸ் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
23ஆம் தேதி வானகரத்தில் நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் இதுதொடர்பான பிரச்னை வெடிக்கும் என சிலர் எதிர்பார்க்க ஓபிஎஸ்ஸின் பேச்சு புது பிரச்னையை கிளப்பியிருக்கிறது.
 
நேற்று பேசிய ஓபிஎஸ், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறியதை டெல்லி விரும்பவில்லையாம்.
 
ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கும், மோடிக்கும் சரியான பெயர் இல்லாத சூழலில், ஓபிஎஸ் இப்படி பேசியிருப்பதால், பிரதமர் ஏன் அடுத்த கட்சி விவகாரத்தில் தலையிடுகிறார் என்ற பேச்சு எழுந்துவிட்டதை டெல்லி பாஜக ரசிக்கவில்லை என தெரிகிறது.
 
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கவும், இனி வரும் காலம் திமுக Vs பாஜகதான் என்ற பிம்பத்தை கட்டமைக்கவும் ஒருபக்கம் பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஓபிஎஸ் இப்படி பேசியது பாஜகவுக்கு ஷாக் கொடுத்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
 
ஒற்றைத் தலைமை மீது ஓபிஎஸ்ஸுக்கும் ஒரு கண் இருக்கிறது. அதற்கான சிக்னல் டெல்லியிடமிருந்து கிடைக்கும் என்று ஓபிஎஸ் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இபிஎஸ் டெல்லியில் செய்யும் லாபியை மீறி ஓபிஎஸ்ஸால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால்தான் இரட்டை தலைமையே தொடரட்டும் என கூறியிருக்கிறார்.
 
மேலும், டெல்லியின் பெரும்பான்மையான ஆதரவு இபிஎஸ்ஸுக்குத்தான் இருக்கிறது. அந்த தைரியத்தில்தான் ஒற்றைத் தலைமையே, கழக பொதுச்செயலாளரே என்று போஸ்டரில் இபிஎஸ் படம் இடம்பெற்றிருக்கிறது.
 
இதனை விரும்பாததால்தான் ஓபிஎஸ் நேற்று மோடியை இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டதாகவும், இதனால் கடுப்பில் இருக்கும் டெல்லி பாஜக பன்னீர் விஷயத்தை வேறு மாதிரி அணுகும் எனவும் ஒரு பார்வை உருவாகியிருக்கிறது.
 
இது இப்படி இருக்க ஒருவேளை அதிமுகவில் இனி வரும் காலங்களில் தான் ஓரங்கட்டப்பட்டால் அதற்கு பாஜகவும் ஒரு காரணமாக அமையும் என நினைக்கும் ஓபிஎஸ், எதுவுமே முடியாதபட்சத்தில் சசிகலாவுடன் கைகோர்த்துவிடுவது என்ற திட்டத்தில் இருக்கிறார் எனவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
எது எப்படியோ நேற்று நடந்த அதிமுக களேபரத்தில் மோடியின் பெயர் இடம்பெற்றது எதேச்சையாக நடந்தது அல்ல திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top