ராஜபக்‌ஷேக்களுக்கு இந்தியா தஞ்சமளிக்கக் கூடாது: அன்புமணி!

ராஜபக்‌ஷேக்களுக்கு இந்தியா தஞ்சமளிக்கக் கூடாது: அன்புமணி!

போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
அத்துடன் ராஜபக்‌ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார்.
 
பொதுமக்கள் ராஜபக்‌ஷேவின் வீட்டை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களையும் இலங்கை மக்கள் தகர்த்து வருகின்றனர். தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்‌ஷே இலங்கை திரிகோணமலையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில், இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது!
 
திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த இராஜபக்சே இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் இராஜபக்சே சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது!
 
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்!" என ட்விட்டரில் வலியுறுத்தி இருக்கிறார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top