இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது - முதலமைச்சர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது - முதலமைச்சர் கடிதம்!

இலங்கைக்‌ கடற்படையினரால்‌ சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ‌ஜெய்சங்கருக்கு‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 7 மீனவர்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியைச்‌ சேர்ந்த 5 மீனவர்கள்‌ உள்ளிட்ட 12 தமிழக மீனவர்கள்‌, இலங்கைக்‌ கடற்படையினரால்‌ நேற்று  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்‌, அவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ உடனடியாக விடுவிக்கத்‌ தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக்‌ கோரி முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஜெய்சங்கருக்கு இன்று கடிதம்‌ எழுதியுள்ளார்‌.
 
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள்‌ மீன்பிடித்‌ தடைக்காலத்திற்குப்‌ பிறகு தமிழக மீனவர்கள்‌ மீன்பிடிக்கத்‌ தொடங்கியுள்ள நிலையில்‌, இலங்கைக்‌ கடற்படையினரால்‌ 12 மீனவர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ள இந்தச்‌ சம்பவம்‌, தமிழக மீனவர்களை அச்சுறுத்தும்‌ வகையில்‌ உள்ளதோடு, மாநிலத்தின்‌ கடலோரப்‌ பகுதிகளில்‌ பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைக்‌ கடற்படையினரால்‌ சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள்‌ வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார்.
 
முன்னதாக நேற்று எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள், விசைப்படகு மூலம், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த‌தாக 12 பேரையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் குடாநாடு பகுதியல் உள்ள மீன்பிடி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 12 பேரையும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top