இந்தியா வெற்றி: ஆட்டநாயகன் ஆன பும்ரா!

இந்தியா வெற்றி: ஆட்டநாயகன் ஆன பும்ரா!

இருக்கையின் இறுதிக்கே வரவழைத்த இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியின் கடைசி ஓவரை பும்ரா துல்லியமாக வீச, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்து கைகொடுத்தார். இங்கிலாந்து அணியின் போராட்டம் வீணானது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரண்டாவது போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் பிளங்கட் நீக்கப்பட்டு, டாசன் வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் பர்வேஸ் ரசூலுக்கு பதில் அமித் மிஸ்ரா இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி, லோகேஷ் ராகுல் நிதான துவக்கம் தர, முதல் மூன்று ஓவரில் 15 ரன்கள் தான் கிடைத்தன. இதில், முதல் ஓவரை ‘ஸ்பின்னர்’ டாசன் வீசியது வியப்பான விஷயம். பின் மில்ஸ் ஓவரில் கோஹ்லி வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது அதிக நேரம் நீடிக்கவில்லை. ஜோர்டான் ‘வேகத்தில்’ கோஹ்லி(21) அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ரஷித் வலையில் ரெய்னா(7) சிக்கினார். மொயீன் அலி ‘சுழலில்’ யுவராஜ் தடுமாற, 9வது ஓவரில் ஒரு ரன் தான் கிடைத்தது. தனது அடுத்த ஓவரில் யுவராஜை(4) வெளியேற்றி, காரியத்தை கச்சிதமாக முடித்தார் மொயீன் அலி.

ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் துணிச்சலாக ஆடிய லோகேஷ் ராகுல் அவ்வப்போது சிக்சர், பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கை தந்தார். அரைசதம் கடந்த இவர், 71 ரன்களுக்கு அவுட்டானார். தோனிக்கு பதில் 5வது இடத்தில் களமிறங்கிய மணிஷ் பாண்டே மந்தமாக ஆடினார். இவர், 30 ரன்களுக்கு நடையை கட்டினார். கடைசி கட்டத்தில் வந்த தோனிக்கு ‘பேட்டிங்’ செய்ய போதிய வாய்ப்பு கிடைக்காததால், ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. 

ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் பாண்ட்யா(2), அமித் மிஸ்ரா(5) ரன் அவுட்டாகினர். கடைசி பந்தில் தோனி(5) போல்டானார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 3 விக்கெட் வீழ்த்தினார். 

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, நெஹ்ரா ‘வேகத்தில்’ தடுமாறியது. இவரது பந்துவீச்சில் பில்லிங்ஸ்(12), ஜேசன் ராய்(10) வரிசையாக அவுட்டாகினர். அடுத்த பந்தை மார்கன் சமாளிக்க, நெஹ்ராவின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. அமித் மிஸ்ரா பந்தில் மார்கன்(17) அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுக்கு வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. நெஹ்ரா வீசிய 19வது ஓவரில் பட்லர் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க 16 ரன்கள் எடுக்கப்பட்டன. 

கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. பும்ரா அபாரமாக பந்துவீசினார். முதல் பந்தில் ஜோ ரூட்(38) சர்ச்சைக்குரிய முறையில் எல்.பி.டபியுள்யு., ஆனார். ‘ரீப்ளே’வில் பந்து ‘இன்சைட் எட்ஜ்’ ஆனது தெரிந்தது. 2வது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ரன் இல்லை. 4வது பந்தில் பட்லர்(15) போல்டாக, அரங்கம் அதிர்ந்தது. 5வது பந்தில் ஒரு ரன். கடைசி பந்தில் மொயீன் அலி ரன் எடுக்க தவற, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 

இந்தியா சார்பில் நெஹ்ரா 3, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றார். அடுத்து பைனல்: தற்போது, தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் பைனல் போன்ற 3வது போட்டி வரும் பிப்.1ல் பெங்களூருவில் நடக்க உள்ளது. 

இளம் இந்திய அணியின் (19 வயதுக்குட்பட்ட) பயிற்சி நிபுணர் ராஜேஷ் சாவந்த், மும்பை ஓட்டலில் தூக்கத்தில் மரணம் அடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதே போல முகமது ஷமியின் தந்தை சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். 

நேற்று மார்கனை அவுட்டாக்கிய அமித் மிஸ்ரா, ஒட்டுமொத்த ‘டுவென்டி-20’ போட்டிகளில் 200 விக்கெட்(169 போட்டி) வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரரானார். இதற்கு முன் இந்த மைல்கல்லை அஷ்வின் எட்டினார். 

நேற்று இந்திய அணி கடைசி 3 ஓவரில் (17-20), 5 விக்கெட்டுகளை இழந்தது. ‘டுவென்டி-20’ அரங்கில் இரண்டாவது முறையாக இப்படி சரிந்தது. இதற்கு முன்பு இதே இங்கிலாந்துக்கு (2011, ஓல்டுடிரபோர்டு) எதிராக இது போல விக்கெட்டுகளை பறிகொடு்த்தது. இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ரன் எடுத்த இந்திய வீரரானார் லோகேஷ் ராகுல் (71). இதற்கு முன் சேவக், 68 ரன் (டர்பன், 2007) எடுத்திருந்தார்.

Tags: News, Sports, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top