12-வது சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் சாம்பியன்!

12-வது சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் சாம்பியன்!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் 31.01.2021, ஞாயிறுக்கிழமை இரவு நடந்த 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் மாநிலத்துக்கு உட்பட்ட பரோடா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றியது.

முதலில் ஆடிய பரோடா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழக அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. நட்சத்திர வீரர்களான ஆர்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், முரளி விஜய், விஜய் சங்கர் ஆகியோர் இல்லாமலும் தமிழக அணி தோல்வியையே சந்திக்காமல் சாதித்து இருக்கிறது.

ஏற்கனவே 2007-ம் ஆண்டிலும் தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி இந்த கோப்பையை வென்று இருந்தது. முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றிய தமிழக அணியினர் தினேஷ் கார்த்திக் தலைமையில் ‘மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிக்கு பிறகு தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த முறை (2019) மயிரிழையில் (இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வி) கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது வேதனை அளித்தது. இந்த ஆண்டு நாங்கள் ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.
 
அத்துடன் நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினோம். அது தான் நல்ல அணிக்கு அறிகுறியாகும். கடந்த ஆண்டு இந்த அணியில் இடம் பிடித்து இருந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தற்போது இந்திய அணியில் ஆடுகிறார்கள். அது எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்குரிய அடையாளமாக நான் நினைக்கிறேன். இந்த அணியில் இருந்து சிலர் அடுத்த கட்டத்துக்கு (இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்.போட்டிக்கு) முன்னேறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
 
கடந்த 4-5 வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது. தேசிய அணிக்காக விளையாடுவதால் மாநில அணிக்கும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. ஆமதாபாத் ஸ்டேடியம் மிகப்பெரியதாக இருக்கிறது. இங்கு ஐ.பி.எல். போட்டி நடந்தால் அபாரமாக இருக்கும். இந்த தொடர் முழுவதும் போட்டி கடுமையாக இருந்தது. எங்களது சிறப்பான செயல்பாட்டுக்கு அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் சிறந்த பணியும் காரணமாகும்’ என்று தெரிவித்தார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top