அடையாள அட்டைகளை அரசிடமே ஒப்படைக்க முடிவு : மெரினாவில் இளைஞர்கள்

அடையாள அட்டைகளை அரசிடமே ஒப்படைக்க முடிவு : மெரினாவில் இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என கைவிரித்துள்ள மத்திய அரசை கண்டித்து தங்களது ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகளை அரசிடமே ஒப்படைக்க போவதாக கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நாளை தங்களது அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 3-வது நாளாக இரவு , பகல் பாராமல் போராடி வரும் இளைஞர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தீவிரமடைந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் முழு அடைப்பு போராட்டமாக மாறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்கள் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த கோரி நாளை லாரிகள் மற்றும் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தையடுத்து தமிழகம் முழுவதும் நாளை 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரையை பொறுத்த வரை பெரும்பாலான கடைகள் இன்றே அடைக்கப்பட்டுவிட்டன. மேலும் தமிழகதத்தில் திரையரங்குகளும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தியே தீர  வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் பொங்கலுக்கு முன் தமிழகத்தில் சிறு தீப்பொறியாக கிளம்பிய போராட்டம், அலங்காநல்லூரில் 21 மணி நேரம் விடிய வடிய  போராட்டம் நடத்திய 250 பேரை கைது செய்த பிறகு பெரும் எரிமலையாக வெடித்துள்ளது.

தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும், கடல் கடந்து தமிழர்கள் வசிக்கும் இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், என பல்வேறு இடங்களிலும் பரவியது. தலைநகர் சென்னை மெரினாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடி வருகின்றனர். போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்ததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை, மாநில முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க இச்சந்திப்பின் போது மோடியை வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி மத்திய அரசால் ஏதும் செய்ய இயலாது. எனினும் மாநில அரசின் முடிவுகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமா் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றார்.

மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள், 'நன்மையே யாவும் நன்மையாய் முடியும்' , பொறுமையாக இருங்கள் என சூசகமாக கூறியுள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் பல்வேறு தரப்பினரின் ஆதரவு போராட்டம் காரணமாக முழுஅடைப்பு போராட்டமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top