குடியரசு துணை தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - மம்தா திடீர் அறிவிப்பு!

குடியரசு துணை தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - மம்தா திடீர் அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்தமாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ஆகஸ்ட் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் களம் இறங்கியுள்ளார்.
 
எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் மார்க்கரெட் ஆல்வா களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தலில் திடீர் திருப்பமாக, திரிணாமுல் காங்கிரஸ் வாக்கெடுப்பில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.  குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் முன்னின்று செயல்பட்ட திரிணாமுல் காங்கிரசின் இந்த முடிவு எதிர்க்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்த அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, அதற்கான காரணங்களையும் விளக்கினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்க்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியிடம் முறைப்படி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசிக்கவில்லை என அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் மொத்தம் 35 எம்.பிக்களை கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரசின் கருத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அபிஷேக் பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார். அதே நேரம் ஆளுநராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சி அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைபோட்ட ஜெகதீப் தன்கருக்கு ஆதரவளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அபிஷேக் பானர்ஜி, எனவே குடியரசு துணை தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கட்சியின் எம்.பிக்கள் கூட்டத்தில் 85 சதவீத எம்.பிக்கள் இந்த முடிவையே வலியுறுத்தியதாகவும்  திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top