ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது. 

புது டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரம் செய்வதைத் தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அச்சு, மின்னணு, சமூக மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து பல விளம்பரங்கள் வெளியாகி வந்த நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
 
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
 
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடந்து வரும் சட்டவிரோதமான பந்தயம் மற்றும் சூதாட்டம் காரணமாக பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இதை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் சூதாட்டங்கள் விளம்பரங்கள் இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட, இந்தியாவில் இதுபோன்ற விளம்பரங்களைக் காட்டவோ அல்லது இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "தற்போது இயற்றப்பட்ட சட்டம் சரியானதாக இல்லை" எனவும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டு வாருங்கள் எனக்கூறி ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி அளித்தது.
 
தற்போது திமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழவை அமைத்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதுக்குறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இன்று மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது. விரைவில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகளுக்கும் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top