ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக 99 சதவீதம் வாக்குப்பதிவு!

ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக 99 சதவீதம் வாக்குப்பதிவு!

ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இது முந்தைய ஜனாதிபதி தேர்தலை காட்டிலும் அதிகபட்ச வாக்குப்பதிவு என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில், ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களித்தனர். இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டசபை வளாகங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், சத்திஸ்கர், அசாம், குஜராத், பீகார்,அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப் மிஸ்ரா, "ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு 99 சதவீதத்தை எட்டியுள்ளது. பாமக அன்புமணி ராமதாஸ், திரிணாமுல் காங்கிரஸ் தபாஸ் பால், பிஜு ஜனதாதளம் ராம் சந்திரா ஆகிய 3 எம்.பி.க்கள் மட்டும் வாக்களிக்கவில்லை" என்று கூறினார்.

வாக்கு எண்ணிக்கை வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும். முதலில் நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பெட்டியில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் அகரவரிசை அடிப்படையில், மாநில வாக்குப்பெட்டிகள் திறந்து வாக்குகள் எண்ணப்படும். 4 மேஜைகளில் , 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top