எம்எல்ஏக்களை மீட்க கூவாத்தூருக்கு செல்லும் ஓபிஎஸ் குழு!

எம்எல்ஏக்களை மீட்க கூவாத்தூருக்கு செல்லும் ஓபிஎஸ் குழு!

கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சசிகலாவினால் சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்எல்ஏ செம்மலை ஆகியோர் கூவத்தூருக்கு விரைந்துள்ளார். தங்களுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள எம்எல்ஏக்களை மீட்க கூவத்தூருக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒருவார காலமாக அதிமுகவில் அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவார காலமாக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர். 8 எம்எல்ஏக்கள், 11 எம்.பிக்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர்.

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரு தினங்களாக கூவத்தூர் சென்று பேசி வந்த சசிகலா, நேற்று இரவு முதல் சசிகலா கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் தங்கியுள்ளார்.

இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபைக்குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும், கசப்புகளை பிரிந்து ஒற்றுமையாக நாம் அதிமுக ஆட்சியை தொடருவோம் என்று கூறினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது என்பது இன்று உறுதியாகியுள்ளதாக பேசினார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எம்எல்ஏக்களை மீட்க கூவத்தூர் ரிசார்ட்ஸ்க்கு கிளம்பினார். அவருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் சென்றுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே அதிரடிப்படை போலீஸ் கூவத்தூர் ரிசார்ட்ஸ்க்குள் நுழைந்துள்ளது. அரசு பேருந்துகளும் கூவத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் அணியுடன் இணைய விரும்பி அவருக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்களை அழைத்து வர கூவத்தூருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன், செம்மலை ஆகியோர் விரைந்துள்ளார். ஏற்கனவே சசிகலாவிற்கு ஆதரவான எம்எல்ஏக்கள், அடியாட்கள் குவிந்துள்ள நிலையில் போலீஸ் படையுடன் ஓபிஎஸ் அணியினர் சென்றுள்ளது கூவத்தூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூவத்தூர் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. ரிசார்ட்டில் தங்கியுள்ள அனைவரையும் அழைத்து வர சென்று கொண்டிருக்கிறோம் என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ள நிலையில் அமைச்சர் பாண்டியராஜனின் அழைப்பை ஏற்று அதிமுக எம்எல்ஏக்கள் வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top