தொடரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் பிரதமர் மோடி ஜப்பானில் பேச்சு

தொடரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் பிரதமர் மோடி ஜப்பானில் பேச்சு

நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணர மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் காத்திருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்தார். 

ஜப்பானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, அங்குள்ள கோபே நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சனிக்கிழமை கலந்துகொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது: 
இந்தியாவில் பெருமளவில் கருப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது. மேலும், பயங்கரவாதிகளும் கோடிக்கணக்கிலான கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை வளரவிட்டால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனைக் கருத்தில்கொண்டுதான், இந்தியாவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 
 
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு இதுதொடர்பாக நீண்டநாள்கள் யோசித்தேன். ஏனெனில், இந்த அறிவிப்பால் மக்கள் சிறிது காலம் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பது எனக்குத் தெரியும். அதேசமயத்தில், இதனை ரகசியமாக வைத்திருந்து திடீரென அறிவிப்பதும் அவசியம். எனவேதான், இந்த நடவடிக்கையானது எந்த முன்னறிவிப்புமின்றி செயல்படுத்தப்பட்டது.
 
இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக நாட்டு மக்கள் என்னை வசைபாடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், வரவேற்பும், பாராட்டுகளும் வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த நெருக்கடியான சூழலில், பல குடும்பங்களில் திருமண நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்; சிலருக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டிருக்கும். அவர்கள் அனைவரும் இந்த தருணத்தில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனினும், நாட்டின் நீண்டகால நலனுக்காக, இந்த சிரமங்களை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். இதற்காக, அவர்களுக்கும், நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
 
அதிரடி நடவடிக்கைகள்: ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய அறிவிப்பானது, நாட்டின் பொருளாதாரத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையாகும். இந்தியாவில் இன்னமும் பல கோடி ரூபாய் கருப்புப் பணம் புழங்கி வருவது எனக்குத் தெரியும்.
 
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எங்கும் தப்பிவிட முடியாது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, கருப்புப் பண விவகாரத்தில் மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்பதற்கு என்னால் எந்த உத்தரவாதமும் தர முடியாது.
 
ஆனால், அரசின் எந்த நடவடிக்கையும் சாமானிய மக்களையும், நேர்மையானவர்களையும் பாதிக்காது என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் என்றார் நரேந்திர மோடி.
 

Tags: News, Lifestyle, Art and Culture, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top