அரசியலுக்கு முந்தப்போவது யார்?

அரசியலுக்கு முந்தப்போவது யார்?

அரசியலில் நுழைய வாய்ப்பு இருப்பது போன்று நடிகர் கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ள நிலையில் அரசியலில் முந்தப் போவது அண்ணாமலை ரஜினியா, ஆழ்வார்பேட்டை ஆண்டவரா என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஆட்சி செய்தவர்கள் ரஜினியும், கமல்ஹாசனும்தான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திரையுலகில் வலம்வரும் இருவருக்கும் அரசியல் வருகை குறித்த பேச்சு புதிதல்ல என்றுதான் சொல்லவேண்டும். திரைத்துறையைதாண்டி, அரசியல், இலக்கியம் என கமலின் வட்டம் பெரியது. ஆனால், ரஜினிகாந்துக்கு நட்புவட்டம் பெரியது. இப்படி இருவருக்கும் வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் பிரவேசம், அரசியல்வாதிகள் செயல்பாடுகள் மீதான விமர்சனம் ஆகியவற்றியில் ஒற்றுமையுண்டு.

1978 ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தை தொடங்கிய கமல், 1989 ஆம் ஆண்டில் நற்பணி மன்றமாக மாற்றினார். இந்த அமைப்பில் 20 லட்சம் பேர் உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அமைப்பின் விழாக்களில் பங்கேற்கும் கமல் பலமுறை அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ஒரு முறை பேசிய கமல், அரசியல் சாக்கடை என்று குறிப்பிட்டிருந்தார். அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்று சகாயத்திற்கு முன்பே கமல் அழைப்பு விடுத்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்ததோடு, கலவரத்தின் போது நடத்தப்பட்ட தடியடிக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதே போன்ற ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதையும் கமல் விமர்சித்திருந்தார்.

இதுவரை அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விகளுக்கு கமல்ஹாசன் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. விருமாண்டி முதல் விஸ்வரூபம் வரை தனது படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியபோதும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னாரே தவிர அரசியல் நெருக்கடியால் தான் அரசியலுக்கு வருவேன் என்று எப்போதும் சொன்னதில்லை.

இந்நிலையில் அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாகக் கூறியதையடுத்து அவரை அதிமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் ஸ்டாலின், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் கமல் நேற்று டுவிட்டரின் அரசியலில் தான் நுழைய வாய்ப்பு இருப்பது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் அரசியலுக்கு தான் வருவது குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன் என்று 20 ஆண்டுகளாக கூறி வருகிறார் ரஜினிகாந்த். அமையாது அலைபவர்க்கும், அமைந்த என் தோழர்க்கும் விரைவில் ஒரு விளி கேட்கும் என்று கமல் நேற்று கூறியுள்ளார். இதனால் அரசியலில் முதலில் கால்வைக்கப்போவது அண்ணாமலை ரஜினியா, ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கமலா என்ற விவாதங்களும் அரசியல் அரங்கில் விவாதத்திற்கு தயாராகிவிட்டன.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top