ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை எப்படி, எங்கே மாற்றுவது?

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை எப்படி, எங்கே மாற்றுவது?

 கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது  அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்ல வேண்டுமா?

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன.
 
அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ500, ரூ2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 
 
உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 
 
உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். 
 
உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். 
 
ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 
 
ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம். 
 
உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம். 
 
ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். 
 
நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். 
 
நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். ஏடிஎம்கள் இன்று இயங்காது. 
 
ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 
 
நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 
 
வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். 
 
நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும். ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். 
 
வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 
 
டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும். 
 
நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 
 
நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 
 
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 
 
கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in ; www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்
 
பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top