எம்.எல்.ஏ க்களை சமாதானப்படுத்த 3 நாட்கள் ஆலோசனை!

எம்.எல்.ஏ க்களை சமாதானப்படுத்த 3 நாட்கள் ஆலோசனை!

அதிமுக இப்போது பல அணிகளாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் ஜாமீனில் வந்துள்ளததோடு பரபரப்பாக பேட்டி அளித்து வருவது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை அதிகரித்துள்ளது. எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாட்கள் சந்தித்து பேசப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் தினகரன் அணிக்கும் உச்சக்கட்ட மோதல் ஆரம்பித்துள்ளது. சிறைக்கு செல்லும் முன்னர் தினகரனை ஒதுக்கி வைத்த அதிமுக அமைச்சர்கள், அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

தினகரனை ஒதுக்கி வைத்ததாக அறிவித்த முடிவு அப்படியே தொடர்கிறது. அவரும் ஒதுங்கியே இருப்பது நல்லது என அதிமுக அமைச்சர்கள் நேற்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதனையடுத்து தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்த பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் இன்னும் இரண்டு மாதங்கள் ஒதுங்கியிருப்பேன். அதன் பின்னர் எனது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என்றார். ஆனால் இந்த இரண்டு மாத கால அவகாசம் என்பது எதற்காக என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இரண்டு மாத காலத்தில் தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்களை திரட்ட தினகரன் தனது அணிக்கு உத்தரவிட்டுள்ளாராம். இதனையடுத்து தினகரன் அணி களத்தில் தற்போது அதிரடியாக குதித்துள்ளதாம். ஆதரவாளர்களை ரகசியமாக திரட்டி வருகின்றனராம்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள தலித் எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்து அவர்களை வளைக்க மிகப்பெரிய திட்டத்தை தயார் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக இன்றே இரண்டு எம்எல்ஏக்கள் தினகரன் வீட்டிற்கு வந்துள்ளனர்.

கலசப்பாக்கம் பன்னீர் செல்வம், செய்யாறு மோகன் தினகரன் வீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர். டிடிவி தினகரன் கெடு கொடுத்துள்ள இரண்டு மாத காலத்திற்குள் 40 எம்எல்ஏக்களை தினகரனுக்கு ஆதரவாக மாற்றி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அணி அணியாக சிதறியுள்ளதால் கூட்டத்தை அமைதியாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்கட்சி எம்எல்ஏக்களை விட பங்காளி எம்எல்ஏக்களை கலகக் குரல் எழுப்பினால் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தனது கட்சி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் 3 நாட்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசப் போகிறாராம். எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்புக்கு கட்டுப்பட்டு எத்தனை எம்எல்ஏக்கள் வரப்போகிறார்களோ தெரியலையே.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top