தலைநகரை கலக்கப் போகும் "திராவிடக் கோட்டை"!

தலைநகரை கலக்கப் போகும்

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அண்ணா கருணாநிதி அறிவாலயம் அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் திமுக கட்டி எழுப்பியுள்ள அண்ணா கருணாநிதி அறிவாலயம், டெல்லியின் புதிய அடையாளமாக மட்டுமல்லாமல், திராவிடக் கோட்டையாகவும் திகழப் போகிறது என்று திமுகவினர் பெருமையுடன் சொல்கின்றனர்.
 
டெல்லி அரசியலைப் பொறுத்தவரை முன்பெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஏகபோகமாக கோலோச்சி வந்தது. ஆனால் மறைந்த வி.பி. சிங் இந்த ஏகபோகத்தைக் கலைத்துப் போட்டார். அவரது தலைமையில் 3வது அணி உருவெடுத்தபோது காங்கிரஸைத் தாண்டியும் அரசியல் உள்ளது என்பதை தேசம் உணர்ந்தது.
 
ஆனால் 3வது அணி மக்களின் அபிமானத்தைப் பெறத் தவறியது. காரணம், அடுத்தடுத்து நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள், பிரதமர் மாற்றம் போன்றவையால். இந்த நிலையில்தான் அயோத்தி ராமர் பிரச்சினையைக் கையில் எடுத்து இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து ஒரே புள்ளியில் நிலை நிறுத்தி புதிய அரசியல் பாதையைப் போட்டது பாஜக.
 
வாஜ்பாய் என்ற முகத்தைக் காட்டி பாஜக வந்தபோது சாதாரண மக்களும் கூட அதை நம்பி வாக்களிக்க திரண்டதால் காங்கிரஸ், 3வது அணி ஆகிய இரண்டும் அடிபட்டுப் போய் பாஜக தலையெடுத்து விட்டது. இன்று பாஜக அசைக்க முடியாத பெரும் சக்தியாக மாறி நிற்கிறது.
 
அன்று இப்படித்தான் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தபோது எதிர்க்கட்சிகள் திரண்டெழுந்து அணி அணியாக வந்து காங்கிரஸை சல்லி சல்லியாக நொறுக்கி பலவீனப்படுத்தினர். இப்படி பலவீனப்படுத்தப்பட்டதால்தான் இன்று காங்கிரஸால் பலத்துடன் பாஜகவுடன் மோத முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
 
இந்த நிலையில் இன்று டெல்லியில் புதியதொரு சக்தியாக திமுக உருவெடுக்கப் போகிறது. இதற்கான அடித்தளம்தான் அண்ணா கருணாநிதி அறிவாலயம் என்று பேசப்படுகிறது. டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து பார்த்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பும், அவரைப் பார்க்க டெல்லியில் உள்ள தேசியத் தலைவர்கள் காட்டிய ஆர்வமும், பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாலினுக்குக் கொடுத்த முக்கியத்துவமும் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
 
தற்போது திமுக அலுவலகமான அண்ணா கருணாநிதி அறிவாலயத்தை திராவிடக் கோட்டையாக திமுகவினர் சித்தரிக்கின்றனர். திராவிடத்தின் சித்தாந்தத்தை அகில இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் மையமாக அண்ணா கருணாநிதி அறிவாலயம் விளங்கும் என்றும் அவர்கள் திடமாக நம்புகின்றனர். இன்னொரு விஷயமும் பேசப்படுகிறது.
 
எதிர்க்கட்சிகளின் புதிய கூடுமிடமாக இனி அண்ணா கருணாநிதி அறிவாலயம் விளங்கும் என்றும் திமுகவினர் அடித்துச் சொல்கின்றனர். இது நாள் வரை காங்கிரஸ் தலைவர்களின் இல்லம்தான் முக்கிய கூடுமிடமாக இருந்து வந்தது. நாளை இது மாறலாம்.. காங்கிரஸ் அலுவலகத்திற்கு வர விரும்பாதவர்களையும் கூட அண்ணா கருணாநிதி அறிவாலயம் தன் பக்கம் ஈர்க்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
 
டெல்லி அரசியலில் நிச்சயம் அண்ணா கருணாநிதி அறிவாலயம் இனி முக்கியப் பங்கு வகிக்கும்..திமுகவின் பக்கம் பல தேசிய, பிராந்தியக் கட்சிகளை அணி திரளச் செய்யும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top