ஆச்சரியப்படுத்தும் அபூர்வ புளியமரம்!

ஆச்சரியப்படுத்தும் அபூர்வ புளியமரம்!

கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குள்ள 500 வருடம் பழமையான மரம் ஒன்றைக் காட்டுவார்கள். எல்லோரும் அதிசயத்துப் பார்ப்பார்கள். மதுரையிலும் இதேபோல் 500 வருடங்கள் தாண்டிய பழமையான புளியமரம் இருக்கிறது.

மேலும், இந்த மரம் இன்றும் சுமந்திருக்கும் சரித்திரமும், அமானுஷயமும் நம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தீவிரமாக எதிர்த்தார் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர். அவரைச் சூழ்ச்சி செய்து சிறைப்பிடிக்க எண்ணிய ஆங்கிலேயத்தளபதிகள் கர்னல் பான்ஜோர், ஜோசப் ஸ்மித் ஆகியோர் படைதிரட்டி, முத்துவடுகநாதர் நிராயுதபாணியாக காளையார் கோயிலில் 1772 மே 25-ஆம் நாள் இறைவனை வழிபட்டுத் திரும்பிய போது, அவரைச் சுட்டுக்கொன்றனர். மன்னர் இறந்தவுடன் அவரது மனைவியான ராணி வேலுநாச்சியாரைத் தேடி அவரையும், அவர் குடும்பத்தையும் அழித்துவிட நினைத்தனர். விஷயம் அறிந்த வேலுநாச்சியார் தனது தளபதிகளான மருதுபாண்டியர்களின் துணையுடன் விருப்பாச்சி நோக்கிப் பயணமானார். போகும்வழியில் இந்தக் கோச்சடை வழியாகத்தான் சென்றார். போகும்வழியில் இந்தக் கோயில் அய்யனாரைக் கணநேரம் வேண்டிவிட்டு, சில நிமிடங்கள் இங்குள்ள பெரிய புளியமர நிழலில் சில நிமிடங்கள் இளைப்பாற்றிக்கொண்டு, பின் விருப்பாச்சி நோக்கி பயணமாயினர்.

விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர் ஆதரவுடன் எட்டு ஆண்டுகள் இருந்து திட்டமிட்டு, சிவகங்கையை எப்படியும் மீட்க வேண்டும் என்ற வேட்கையுடன் ஹைதர் அலியின் படைஉதவியுடன் சிவகங்கையை மீட்க 1799-ஆம் ஆண்டு பயணமானார். இவரது வருகையை அறிந்த ஆங்கிலேயர்களின் படை வீரர்கள், இந்தக் கோச்சடை முத்தையா கோயிலில் இருந்த பிரம்மாண்டமான புளியமரத்தில் ஏறி மறைந்திருந்தனர். ஆனால், வேலு நாச்சியாரின் படை, ஆங்கிலேயர் படையை ஓடஓட விரட்டி விட்டது. தனது மீட்புப் போராட்டத்தின் முதல்போர் வெற்றிகரமாக அமைந்ததை எண்ணி மகிழ்ந்த வேலு நாச்சியார் அங்கிருந்த அய்யனாரை வணங்கி நன்றி தெரிவித்து விட்டுச்சென்றார். பின் திருப்புவனம், காளையார் கோயில், சிவகங்கைப் போரில் வெற்றிபெற்று தன் ராஜ்ஜியத்தை மீட்டார். இதற்கு பிரதிபலனாக கோச்சடை அய்யனார் கோயிலில் வந்து வழிபாடு நடத்தி விட்டுச் சென்றார். இங்குள்ள பழமையான புளிய மரத்தின் நிழலில் தன் பரிவாரங்களுடன் இளைப்பாறிய வேலு நாச்சியார், எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அசைபோட்டார்.

அவரது மன ஓட்டத்தினைப் புரிந்த மாதிரி, நடந்த நிகழ்வுகளுக்கெல்லாம் சாட்சியாக இருந்த அந்தப் புளியமரமும் நன்றாகத் தலையை ஆட்டி குளிர்ந்த காற்றை வாரி வழங்கியது. மதுரையில் மிகப்பழமையான இந்தப் புளியமரத்தின் வயது 500-ஐக் கடந்திருக்கும். காலப்போக்கில் இந்தக் கோயில் வளாகத்தைச் சுற்றி காம்பவுண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு விட்டன. அதனால் இந்தப் புளியமரத்தின் பிரம்மாண்டம் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் கோயிலுக்குள்ளே சென்று பார்த்தால் அதன் பிரம்மாண்டம் நம்மை வாய் பிளக்க வைக்கும். இந்த புளியமரத்தில் குகை போல் பெரிய பொந்து உள்ளது. இந்தப் பொந்துக்குள் மறைந்திருந்து தான் எதிரிகள், வேலுநாச்சியாரின் படைகளைத் தாக்கினார்கள். நடந்து முடிந்த இந்த சரித்திரங்கள் எல்லாவற்றையும் நேரில்கண்ட இந்த மரத்திற்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் ஆயிரம் கதைகள் சொல்லும் தனது அனுபவங்களை!

ஆனால் அது இயலாததால் தன் இலைக்காற்று மொழியால் தனக்குத்தானே பழங்கதைகளைப் பேசிக்கொண்டு இருக்கிறது. சில காலம் முன்பு இந்தப் பிரம்மாண்ட புளிய மரத்தின் மேல் பகுதி, முதுமையின் காரணமாக அப்படியே சரிந்து விழுந்தது. அப்போது கோயில் திறந்துதான் இருந்தது. ஆனால் அங்கிருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. அவ்வளவு பெரிய புளியமரம் சரிந்து விழுந்தும், யாருக்கும் எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை. இதுவே பெரிய அமானுஷயமாக மக்களால் பேசப்பட்டது. வெற்றி சரித்திரமும், கிராமியப் பண்பாட்டின் சின்னமுமாக இருக்கும் இந்தக் கோச்சடை அய்யனார் கோயிலையும், பிரம்மாண்ட மிகப்பழமையான புளிய மரத்தையும், நேரம் கிடைக்கும் போது அவசியம் சென்று பார்த்து வாருங்கள். ஏனென்றால் நமது மதுரை பழமையைப் போற்றும் பாரம்பரிய கோயில் நகரம்!

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top