தேனூர் சித்ரா பௌர்ணமி விழா!

தேனூர் சித்ரா பௌர்ணமி விழா!

சித்திரைத் திருவிழா என்றாலே, மதுரையில் நடக்கும் வைபவங்கள்தான் உலகிற்கே நினைவு வரும். மதுரை என்றாலே இந்த சித்திரைத் திருவிழா தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கும். பாரம்பரியமான இந்த திருவிழா, முன்பு திருமலை நாயக்கமன்னரின் ஆட்சிக்காலத்தில், மதுரைக்கு வடமேற்கே உள்ள தேனூரில்தான் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.

அப்போது நடைபெறும் சித்திரைத்திருவிழா, குருவித்துறையில் உள்ள வல்லப பெருமாளும், கள்ளழகரும் சந்திக்கும் நிகழ்ச்சி தேனூர் மண்டகப்படியில் நடைபெற்றது. இந்தத் திருவிழாவிற்காக, திருப்பதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து, தேனூரில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் உள்ள நடைமுறை சிரமங்களைக் கருதித்தான் திருமலை நாயக்கர், பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு தல்லாகுளத்தில் கோயிலை எழுப்பினார். அதன்பின்னர், திருப்பதி தீர்த்தத்திற்குப்பதிலாக, தல்லாகுளம் பெருமாள் கோயில் தீர்த்தம்தான் திருவிழாவிற்குப் பயன்பட்டது.

தற்போது சிதைந்துபோய்விட்ட இந்த தேனூர் பெருமாள் கோயிலைச் சார்ந்த இரண்டு கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு, அவை தற்போது, திருமலை நாயக்கர் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தே தேனூர் மிகச்சிறப்பு மிக்க நகரமாக இருந்திருக்கிறது.

கோச்சடை மாறன் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில், இந்த தேனூரில் இருந்த பெருமாள் கோயிலுக்கு, நந்தா விளக்கு எரிக்க, இந்த ஊரைச் சேர்ந்த வேளான் அரையன் என்பவன், 50 பசுக்களை இந்தக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்திருக்கிறான். மேலும், அரையந்திருவரங்கி என்பவரும் 50 ஆடுகளை இந்தக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார்.

தேனூருக்கும், திருவேடகத்திற்கும் நடுவில் உள்ள மேலக்கால் என்ற ஊரில் உள்ள வைகை ஆற்றின் நடுவே, கள்ளழகர் எழுந்தருள்வதற்காக ஒரு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அது தற்போது, முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. இந்த மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற சித்திரைத் திருவிழாவினைப் பற்றிப் பல குறிப்புகள் இருக்கின்றன. இந்த தேனூரில், வைகையின் வடகரையில் மேட்டுப்புஞ்சைத் தெருவில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ள பாழடைந்து கிடக்கும் ஒரு சுவற்றுப் பகுதியைத் தான், அந்தப் பழைய பெருமாள் கோயில் என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த மூலவர் சிலையை, நாகதீர்த்தம் என்ற இடத்திற்கு அருகே உள்ள பெருமாள் கோயிலில் வைத்துவிட்டனர்.

மதுரையில் தற்போது, சித்திரைத் திருவிழாவின் போது, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடைபெறும் வைபவங்கள் அனைத்தும், இந்த ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்றது. தற்போதும், சித்திரைத் திருவிழாவின்போது, சித்திரைத் திருவிழாவில், திருக்கண் மண்டபங்களில் அழகர் இறங்க வேண்டும் என்றால் அதற்கு வரி கட்ட வேண்டும்.

இதற்கு அழகர் நுழைவு வரி என்று பெயர். தேனூர் மண்டகப்படிக்கு, அழகர் வரும்போது, மண்டபத்திற்கு அழகர்தான் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டினால் தான் அழகரே அந்த மண்டபத்திற்குள் நுழைவார்.

இந்த தேனூரில் நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்ச்சி, எல்லேரையும் ஆச்சர்யப்பட வைக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊரில் வசித்துவரும் ஒரு சிறுவன் தன் வீட்டிற்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையில் அங்கிருந்த மிகப் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விட்டது.

அந்த சிறுவன் விழுந்துகிடந்த அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் மண்ணைத் தோண்டி விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது தோண்டியவுடனே, அவன் கைகளில் பளபளவென மின்னும் தங்க கட்டிகளும், தங்க பொத்தான்கள், மாலையாக கோர்க்க பயன்படும் தங்க குண்டுகள் கிடைத்தன.

விளையாட்டாக அவன் கண்டெடுத்தது சாதாரண தங்கம் அல்ல. 2000 வருடங்களுக்கு முன்பாக, சங்க காலத்தைச் சார்ந்த தங்க ஆபரணங்கள் அவை. அதற்குச் சான்றாக அவன் கண்டெடுத்த தங்க கட்டிகளில் எல்லாம், ‘போகுல குன்றத்துக் கோதை’ என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆற்றங்கரையை ஒட்டித்தான் சங்க காலங்களில் மதுரையின் நகரங்கள் அமைந்திருந்தன. அப்படித்தான் தேனூரின் வைகை ஆற்றுக்கு சற்று தொலைவில், அந்தக் காலத்தில் தேனூர் மிகச்சிறந்த வாணிப நகரமாக இருந்திருக்கிறது. தங்க ஆபரணங்கள் செய்யும் ஒருவர் இங்கு வாழ்ந்திருக்கலாம். பொன் ஆபரணங்கள் செய்வதற்காக, இந்த தங்க கட்டிகளை வைத்திருந்திருக்கலாம். மேலும், பெண்கள் அணியும் ஆபரணங்களைச் செய்தும், அவரது வணிக வளாகத்தில் வைத்திருந்திருக்கலாம்.

அத்தகைய மிக அபூர்வமான, விலை மதிப்பில்லாத தங்க ஆபரணங்கள்தான் அவை. மேலும், தமிழகத்தில் இதுவரை கிடைத்த தங்கப் புதையல்களில், அதிக விலைமதிப்பு மிக்கதுதான் அந்த ஆபரணங்களும், தங்க கட்டிகளும். அவ்வளவு சிறப்பு மிக்க, தேனூரில்தான் சித்திரைத் திருவிழா முற்காலத்தில் நடைபெற்றிருக்கிறது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top