பிரதமருக்கு மகாராஷ்டிரா முதல்வர் கடிதம்!
Posted on 07/04/2021

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: மகாராஷ்டிராவில் கூடுதலாக 1.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வழங்க வேண்டும். மகாராஷ்டிராவில் மும்பை, புனே, தானே, நாசிக், அவுரங்காபாத், நாக்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இளம் தலைமுறையினரை கொரோனா தொற்று பாதித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் மாநில அரசு தொற்று நோயை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 25 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.