திடீரென பல்டி அடித்த ட்ரம்ப் - அதிர்ச்சியில் இந்தியா

திடீரென பல்டி அடித்த ட்ரம்ப் - அதிர்ச்சியில் இந்தியா

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்றும், அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பை புகழ்ந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் இந்திய தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு தருணங்களில் பாகிஸ்தானை தாக்கி பேச தவறவில்லை டொனால்ட் ட்ரம்ப். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல கோடி டாலர்களை செலவிட்டு என்ன பயன் என்றும், மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாகவும், முதுகில் குத்தியதாகவும் ட்ரம்ப் விளாசியிருந்தார்.

ஒசாமா பின்லேடனை தங்கள் நாட்டில் பதுக்கி வைத்ததற்காக பாகிஸ்தான் இதுவரை அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் குறை கூறியிருந்தார் டொனால்ட் ட்ரம்ப். 

ட்ரம்ப்பின் செயல்பாடுகளை பார்க்கையில் அவர் இந்தியா பக்கம் நெருங்குவதை போன்று இருந்தது. ஆனால், இப்போது திடீர் திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நவாஸ் ஷெரிப், ட்ரம்ப்புக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாகவும், அப்போது ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாகவும், நவாஸ் ஷெரிப் அலுவலகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

நவாஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மக்களை மிகவும் புத்திசாலிகள் என வர்ணித்தார். நவாஸ் ஷெரிப் ஒரு மிகச்சிறந்த மனிதர் எனவும் உரையாடலின்போது குறிப்பிட்டார். பாகிஸ்தான் வாய்ப்புகள் மிகுந்த நாடு என்றும் அவர் கூறினார். மிக விரைவில் நவாஸ் ஷெரிப்பை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும், தான், அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முன்புகூட, எப்போது வேண்டுமானாலும், தொலைபேசியில் அழைக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறினார்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ட்ரம்ப் இவ்வாறு பேசியது உண்மையா என கண்டறிய அமெரிக்க பத்திரிகையாளர்கள், ட்ரம்பின் டீமை அணுகினர். ஆனால் இன்னும் விடை கிடைக்கவில்லை. அதே நேரம், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலையும் ட்ரம்ப் டீம் இதுவரை மறுக்கவில்லை.

எனவே பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் கூறியது உண்மையாகவே இருக்கும் என்று கருதுகிறார்கள் இந்திய தரப்பில்., இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், பிரசாரத்தின்போது பேசியதற்கு நேர் எதிர் நிலைப்பாட்டை ட்ரம்ப் எடுத்துவிட்டார் என்பதே இந்திய தரப்பின் ஆதங்கம்.

ட்ரம்ப் இவ்வாறு பாகிஸ்தானை புகழ பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று.. பெரும்பாலான அதிபர்கள் பிரசாரத்தின்போது பேசுவதை பதவிக்கு வந்தபோது கடைபிடிப்பதில்லை. ட்ரம்ப்பும் அப்படிப்பட்டவராக இருக்கலாம். ஒபாமா கூட இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என பதவியேற்கும் முன்பு கூறிவிட்டு, அப்படியே அதை கைகழுவிவிட்டார்.

தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இதை தடுக்க அதன் நெருங்கிய நண்பன் பாகிஸ்தானை தனது சட்டைப்பைக்குள்ளேயே வைத்திருக்க அமெரிக்கா விரும்புவதும், ட்ரம்ப்பின் இந்த புகழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

Tags: News, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top