துப்பறிவாளனுக்கு சவால் விட்ட ராக்கர்ஸ்

துப்பறிவாளனுக்கு சவால் விட்ட ராக்கர்ஸ்

இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடுகிற கதையாக தமிழ்ராக்கர்ஸ் அட்மினை உலகம் முழுக்க தேடிக்கொண்டிருக்கிறார் விஷால். தமிழ்சினிமாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிட்ட தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், லண்டன் அல்லது கனடாவிலிருந்து இயங்குவதுபோல் ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா என்று உறுதி செய்யப்படாத நிலையில், படத்துறையினரின் சந்தேகப்பார்வை வெளிநாட்டில் வாழும் (இலங்கைத்) தமிழர்கள் மீதே இன்னமும் படிந்திருக்கிறது.

அவர்கள்தான் வெளிநாட்டில் இருந்தபடி தமிழ்த்திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக நினைத்து கெட்டவார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் படத்துறையினர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பல வருடங்களுக்கு முன் தமிழ்த்திரைப்படங்களை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டது லங்காஸ்ரீ.காம் மற்றும் திருட்டுவிசிடி.காம். இந்த இரண்டு இணையதளங்களுமே வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத்தமிழர்களால் நடத்தப்பட்டவை.

தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் போன்ற இன்றைய சட்டவிரோத இணையதளங்களுக்கு எல்லாம் லங்காஸ்ரீ.காம் மற்றும் திருட்டுவிசிடி.காம்தான் முன்னோடிகள். இவற்றில் லங்காஸ்ரீ.காம் என்ற இணையதளம் தற்போது சினி உலகம் என்ற பெயரில் கோடம்பாக்கத்திலேயே கூடாரத்தைப் போட்டிருக்கிறது. இது தெரியாமல் பல லட்சம் சம்பளம் கொடுத்து துப்பறிவாளன்களை நியமித்து சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை தேடிக் கொண்டிருக்கிறது தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

இவர்களின் முயற்சியில்தான், கடந்த வாரம் கௌரிசங்கர் என்ற நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கௌரிசங்கர் பிடிபட்டதும்.. தமிழ்ராக்கர்ஸ் அட்மின் பிடிபட்டதாக முதலில் அறிவித்தனர். சற்று நேரத்தில் தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் என்றனர். கடைசியில். ஆன்ட்டிகாமக்கதைகள்.காமின் அட்மின் என்று கதையையே மாற்றினர்.

இந்த சம்பவம் நடந்து அடுத்தநாளே வாண்டட் என்ற அறிவிப்புடன், யுகேவில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுகசாமி, ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் அரவிந்த் லோகேஸ்வரன் என்ற இரண்டு நபர்கள் குறித்த அறிவிப்பை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அவர்கள் இருவரையும் தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

அடடா. பரவாயில்லையே..விஷாலின் துப்பறிவாளன்கள் பட்டையைக்கிளப்புகிறார்களே என்று பாராட்ட நினைத்தபோது, விஷாலுக்கு தைரியமாக வாட்ஸ்அப்பில் நேரடியாக சவால்விட்ட தமிழ்ராக்கர்ஸ் என்ற ஆடியோ பதிவு யுடியூபில் வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்தது.

அந்த ஆடியோபதிவில் பேசிய நபர் தன்னை தமிழ்ராக்கர்ஸ் அட்மினாக அடையாளம் காட்டிக் கொண்டார். சினிமா சான்ஸ் தேடி வந்த அவருக்கு திரையுலகம் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால், திரையுலகை பழிவாங்குவதற்காகவே தமிழ்ராக்கர்ஸ் என்ற பெயரில் புதிய படங்களை வெளியிடுவதாக ஒரு 'கதை' சொன்னார். (மிஷ்கினை விட்டு திரைக்கதை எழுதச்சொன்னால் துப்பறிவாளன்-2 எடுக்கலாம்.)

அவர் சொன்ன கதை நம்புகிற மாதிரி இல்லை என்றாலும்.. அவருடைய பேச்சை கவனித்தபோது ஒரு விஷயம் புரிபட்டது. அவர் தமிழ்ராக்கர்ஸின் அட்மினோ இல்லையோ.. ஆனால் நிச்சயமாக அவர் வெளிநாட்டில் வசிக்கும் நபர் இல்லை என்பது மட்டும் உறுதி.

திரையுலகிலேயே இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிற, திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்றே தோன்றுகிறது. தன்னுடைய பேச்சில் விஷாலை அவன் இவன் என்று மரியாதைக்குறைவாகப் பேசும் அந்த நபர் மற்ற நடிகர்களைப் பற்றி பேசும்போது விஜய் சார். அஜித் சார். என்று அனைவரையும் சார் என்றே மரியாதையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

திரைப்படத்துறையைச் சாராதவர்கள் என்றால், அவர்களுக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லோருமே அவன் இவன்தான். ரஜினி நல்லா நடிச்சிருக்கான்.. கமல் சூப்பரா நடிப்பான்.. அஜித் அப்படி பண்ணுவன். விஜய் இப்படி பண்ணிருப்பான் என்றே இன்னமும் சினிமா நடிகர்களை மக்கள் ஒருமையில் விளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் எந்நாளும் பேச மாட்டார்கள். நடிகர்களை, இயக்குநர்கள் சார் என்றே அழைப்பர். இந்த லாஜிக்கின் அடிப்படையில் பார்க்கும்போது விஷாலுக்கு சவால்விட்ட அந்த நபர் சத்தியமாக வெளிநாட்டில் இல்லை, கோடம்பாக்கத்திலேயேதான் இருக்கிறார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top