ரஜினிகாந்துக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

ரஜினிகாந்துக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

நடிகர் ரஜினிகாந்த் பல வருட சஸ்பென்ஸ்சை உடைத்து, தான், அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல வருடங்களை அவர் எடுத்துக்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். 1996 முதலே அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினிகாந்த் பெயர் அடிபட்டு வந்த நிலையில், அவர் இப்போதுதான் பாசிட்டிவ் சிக்னல் காட்டியுள்ளார். இத்தனை வருடங்கள் ரஜினிகாந்த் யோசித்ததற்கு பல காரணங்கள் உள்ளன.

தமிழகத்தில் கருணாநிதி என்ற ஆளுமை தீவிர அரசியலில் இருந்தார். ஜெயலலிதா மற்றொரு ஆளுமையாக வலம் வந்தார். ஆனால் இப்போது கருணாநிதி உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. ஜெயலலிதா மரணடைந்துவிட்டார். இந்த சூழ்நிலையில்தான், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக உணர்ந்து, ரஜினி அரசியல் பிரவேசம் செய்கிறார்.

ஆனால், இனிதான் அவர் யோசிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. அதில் முக்கியமானது மாவட்ட செயலாளர்கள் நியமனம். மாவட்ட செயலாளர்கள்தான் ஒரு ஆட்சியில், கலெக்டர்களை போன்று கட்சியில் முக்கிய பங்காற்றுபவர்கள். இவர்களது தலைமையில் அந்த மாவட்டத்தின் கட்சி செயல்பட வேண்டும்.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், முக்கிய கட்சிகளின் மாவட்ட செயலாளர்களை நன்கு 'கவனித்தாக' வேண்டும் என்பது தமிழகத்திலுள்ள சூழல். இப்படி கவுரவம், தலைமையுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு, ஆலோசனை கூறும் வாய்ப்பு, பண வரவு என பல வகைகளிலும் கொடிகட்டி பறக்கும் வாய்ப்பை வழங்க கூடிய பதவி அது.

ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சிக்கு, யாரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்போகிறார் என்பதுதான் பெரும் சவாலான விஷயமாகும். அந்தந்த மாவட்டத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தங்களுக்குத்தான் அந்த பதவி வர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள். இப்போதே கட்சி கொடியுடன் காரில் வலம் வருவதை போல அவர்கள் கனவு காண்கிறார்கள்.

சும்மாவா, தங்கள் தலைவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், கட்சி, பதவி என தாங்களும் வாழ வேண்டும் என்று 20 வருடங்களுக்கும் மேலாக காத்துக் கிடப்பவர்கள் அவர்கள். ஆனால் அவர்களை மாவட்ட செயலாளராக நியமித்தால், அங்கு கட்சியில் இப்போது சேரும் அல்லது சேர உள்ள புதியவர்களுக்கு என்ன பங்கு இருக்கும்? தங்களுக்கு எந்த பங்கும் கிடைக்காது என தெரிந்தால் எப்படி அவர்கள் ஆர்வத்தோடு கட்சியில் சேருவார்கள்? 

ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளை கட்சி பதவிக்கு அமர்த்தி சூடுபட்டுக்கொண்டது தேமுதிக. அதே பாதையில் ரஜினியின் கட்சியும் சென்றால் அது மக்களிடமிருந்து அன்னியப்படும். கட்சி நிர்வாகிகளுக்கு போதிய பதவிகள் கிடைக்காவிட்டால், பலம் வாய்ந்த ரசிகர் மன்றங்களில் இருந்து கட்சிக்கு மனப்பூர்வ ஆதரவுகள் கிடைக்காது. இந்த வகையில் ரஜினி எதிர்கொள்ளப்போகும் பெரிய சவால் கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதுதான்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top