கண்டம் விட்டு கண்டம் வந்து முயற்சி செய்யும் சபிஜே!

கண்டம் விட்டு கண்டம் வந்து முயற்சி செய்யும் சபிஜே!

தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார். அவர் பெயர் சபிஜே. 

இவர் சர்வதேச மாடல். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர். நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருப்பவர்.

இனி சபிஜே வுடன் பேசுவோம்.

உங்கள் முன்கதைச் சுருக்கம் கொஞ்சம் சொல்லுங்களேன்? 

நான் தமிழ்ப் பெண்தான். எங்களுக்கு பூர்வீகம் ஸ்ரீலங்கா. அங்கிருந்து அப்பா அம்மா எல்லாரும் நியூஸிலாந்து போய் தங்கிவிட்டனர். நான் அங்குதான் பிறந்தேன். படித்தது ஆஸ்திரேலியாவில். பி.காம் முடித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் எனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்தது.

நான் நியூஸிலாந்து ,ஆஸ்திரேலியா என்று இரு நாடுகளிலும் பல மியூசிக் வீடியோக்களில் தோன்றியிருக்கிறேன். ஆஸ்திரேலிய அரசு விளம்பரம் உள்பட பல விளம்பரங்களிலும் நடித்தேன். எனக்கு பங்கரா நடனம் தெரியும். இந்த பங்கரா என்கிற பஞ்சாபி நடனத்தை மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றுக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அங்குள்ள 'தார் பஞ்சாபன்' என்கிற பஞ்சாபி நடனக் குழுவில் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடியிருக்கிறேன்.

பல்வேறு ப்ரமோஷன் ஷோக்களிலும் மாடலாகக் கலந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருந்த நான் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி வரை சென்று இருக்கிறேன்.

மிஸ்யுனிவர்ஸ் என்கிற அழகிப் போட்டியில் பங்கு பெற்ற அனுபவம் பற்றி...?

இங்கே எடுத்துக்கொண்டால் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர்களில் சுஷ்மிதா சென். லாரா தத்தா போன்றவர்கள் இந்தியர்கள். அவர்களைப் பற்றி இங்கு எல்லாருக்கும் தெரியும். சினிமாக்களிலும் நடித்து இருக்கிறார்கள், புகழ்பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மிஸ்யுனிவர்ஸ் போட்டியில், நான் செமிபைனல் வரை அதாவது அரையிறுதி வரை சென்றேன். அதற்கு மேல் போகவில்லை.

இப்படி நான் 2015-க்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு 2016-க்கான போட்டிக்கு கலந்து கொள்ள என்னை அழைத்தார்கள், நான் போகவில்லை.

நியூசிலாந்து ,ஆஸ்திரேலியா என்றிருக்கும் நீங்கள் இந்தியா வந்தது எப்படி?

எனக்கு சினிமா மீது எப்போதும் ஆர்வம் உண்டு .அங்கு தமிழ்ப் படங்கள் நிறைய பார்ப்பேன். வீட்டில் பெற்றோர் கூட அதிகம் தமிழ் பேசாவிட்டாலும் நான் தமிழ்ப் படங்கள் பார்த்து தமிழைப் புரிந்து கொள்வேன். என் புரொஃபைல் பார்த்து எனக்கு இங்கிருந்து மாடலிங்கிற்கு அழைப்பு வந்தது.

நியூசிலாந்த்தில் பிறந்தாலும் படித்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில்தான் .இப்போது அங்குதான் வசிக்கிறோம். இருந்தாலும் அடிக்கடி நியூசிலாந்து போய் விளம்பரங்களில் நடிக்கிறேன். நியூசிலாந்துக்கு மூன்று மணி நேர விமானப் பயணம்தான். இங்கு வந்து ஜெடி ஜெரி அவர்களின் விளம்பரத்தில் நடித்தேன் அவர்களின் விளம்பரத்தில் நடித்த பலரும் நடிகைகளாகி இருக்கிறார்கள். 

தமிழ்ச் சினிமாவில் நடிக்க விரும்புவது ஏன்?

நான் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று போனாலும் எனக்கு தமிழ் உணர்வு உண்டு. தமிழ் மக்கள் எல்லாரும என் உடன் பிறந்தவர்களாகவே உணர்கிறேன் அதனால் தமிழ்நாடு,மக்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.

அங்கே பிரபல மாடலாக இருந்தாலும் தமிழில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன் இங்குள்ள எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன். குறிப்பாக விஜய் பிடிக்கும் . அதேபோல சினிமாவில் போராடி ஜெயித்த விஜய்சேதுபதியும் பிடிக்கும்  ஒரு நாள் விஜய்யை 'பைரவா' படப்பிடிப்பில் சந்தித்தேன். அவ்வளவு எளிமையாக இருந்தார் .ஆச்சரியப் பட்டேன்.அதுவரை அவரது சாதாரண ரசிகையாக இருந்த நான் ,அவரைச் சந்தித்த பின்னால் பரம ரசிகையாக மாறிவிட்டேன்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்தான் இந்தியா வந்தேன். இங்கு வந்து எல்லாருடனும் பேசியபின் என் பேச்சுத்தமிழ் வளர்ந்து இருப்பதை உணர்கிறேன்.

'றெக்க' படப்பிடிப்புக்கு ஒரு நாள் போனேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொண்டேன். அதைப் பார்த்த அந்தப் படத்தின் கேமராமேன் தினேஷ் ,தான் பணியாற்றும் அடுத்த படத்துக்கு என்னைப் பரிந்துரை செய்து இருக்கிறார் அப்படி வந்த வாய்ப்புதான் நான் நடிக்கும் புதிய படம்., இயக்குநர் எம்.ஏ.பாலாவின் 'காதல் நகரம்' படம். மோசஸ் இயக்கத்தில் 'ஸ்ட்ரீட் பைட்டர் ' என்கிற தமிழ் டெலிபிலிமிலும் நடித்துள்ளேன்.

படப்பிடிப்பு பார்க்க வந்தேன் இப்படி ஒரு பட வாய்ப்பே கிடைத்து விட்டது. அதில் எனக்குப் பெயர் சொல்லும் படியான அறிமுகம் கிடைக்கும் என நம்புகிறேன் . 'ஏனிந்த மயக்கம்' இயக்கிய இயக்குநர் சக்தி வசந்த் பிரபு என் நண்பர்தான். அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக இருக்கிறார்.

உங்கள் நடிப்பு ஆர்வம் பற்றி உங்கள் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்? 

என் பெற்றோர்கள் வங்கிப் பணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சினிமாவில் நடிப்பதில் அவ்வளவாக விருப்பமில்லைதான். இருந்தாலும் என் ஆர்வத்தைத் தடை செய்ய மாட்டார்கள் நானே சம்பாதித்த பணத்தில்தான் இந்தியா வந்தேன். என் முயற்சிக்கு அவர்களின் வாழ்த்து என்றும் உண்டு.

எந்த வகை நடிகர்கள், படங்கள் பிடிக்கும்?

நடிகர்களில் எவர்க்ரீன் ரஜினி, சிம்பிள் விஜய் , ஹார்டு ஒர்க்கர் விஜய் சேதுபதி பிடிக்கும்.ஆக்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் முதல் இப்போதைய கீர்த்தி சுரேஷ் வரை பலரையும் பிடிக்கும்.படங்களில் காமெடி படங்கள் பிடிக்கும். காமெடி கலந்த ஆக்ஷன் பிடிக்கும் . ஆக்ஷன் படங்களில் ஏதாவது சமூகக் கருத்து இருந்தால் ரசித்துப் பார்ப்பேன். விசிலடித்து வரவேற்பேன். 

சமீபத்தில் பார்த்த படங்களில் 'தேவி' பிடித்தது.'ரெமோ' வும் பிடித்தது.அதற்கு முன் வந்த 'இருமுகன் ' மிகவும் பிடித்தது. 

சினிமாவுக்காக என்ன மாதிரியான முன் தயாரிப்பு,பயிற்சி செய்கிறீர்கள்? 

நான் ஏற்கெனவே நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறேன். பல படங்கள் பார்த்தும் பயிற்சி பெறுகிறேன்.கற்றுக்கொள்கிறேன். நடனத்தில் ஏற்கெனவே ஹிப்ஹாப் தெரியும் .மேற்கத்திய நடன அடிப்படைகள் தெரியும். பங்கரா நடனம் தெரியும். சினிமாவுக்கான நடனத்தை இங்கே ராதிகா மாஸ்டரிடம் கற்று வருகிறேன்.'' 

ஆங்கிலம் போலவே தமிழிலும் படபடவெனப் பொரிந்து தள்ளுகிறார் சபிஜே.அவரது தமிழே பேசும் வேகத்தில் ஆங்கிலம் போலுள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top