செருப்பு அணியமாட்டேன்! உதயநிதி ஸ்டாலினின் புதிய சபதம்!

செருப்பு அணியமாட்டேன்! உதயநிதி ஸ்டாலினின் புதிய சபதம்!

'மனிதன்' படத்திற்குப் பிறகு, வேறு மொழிகளில் ஹிட்டடிக்கும் படங்களைத் தேடிப்பிடித்து ரீமேக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வழக்கமான பார்முலாவில் தயாராகும் படங்கள் அவருக்கு வெற்றிகளைத் தராததும், இதற்கொரு காரணம். அந்த வகையில், இப்போது உதயநிதி வசம் சிக்கியிருக்கிறது ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளத் திரைப்படம்.

மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ஒரு வகையில் நடிகர் பகத் பாசிலின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியை வைத்தது என்றே கூறலாம். அதனால் தானோ என்னவோ, உதயநிதியின் பார்வை அதன் மீது படிந்திருக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள இப்படத்தை இயக்கப்போகிறார் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன். கோபுர வாசலிலே, சினேகிதியே, காஞ்சிபுரம் என்று கவனிக்கத்தக்க சில படங்களை இயக்கியிருந்தாலும், தமிழ் சினிமாவுலகில் அவருக்கென்று தனித்த இடம் கிடைக்கவில்லை.

இப்படம் அக்குறையைப் போக்கும் எனலாம். ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்களை ஹிந்தியில் இயக்கி கல்லா கட்டியவர் பிரியதர்ஷன். ’ரீமேக் ராஜா’ என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு, ஏகபோகமாக படங்களை ரீமேக்கியவர். அதுவே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான ’மகேஷிண்டே பிரதிகாரம்’, அதன் இயல்பான திரைக்கதையாலும் கதை மாந்தர்களாலும் பரவலான கவனிப்பைப் பெற்றது. குறிப்பாக, கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தின் அழகைக் காணத் தந்தது இந்த திரைப்படம். இதனை அப்படியே தேனிக்கு ’ஷிப்ட்’ செய்யவிருக்கிறது இப்படக்குழு.

இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தொடங்கியிருக்கிறது. அது போலவே, தமிழுக்கேற்றாற் போல திரைக்கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதாம்.இப்படத்தின் கதைப்படி, நாயகன் ஒரு போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவன். தனது பால்யகாலத்து தோழியின் மீது காதல் வளர்ப்பவன். ஒருகட்டத்தில், அந்த காதலி அவனைவிட்டுப் பிரிகிறார். அதே நேரத்தில், அவன் வாழும் சிற்றூரில் ஒரு அவமானத்தைச் சந்திக்கிறான். அதற்குப் பழிதீர்க்கும் வரை, காலில் செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் செய்கிறான்.

இது அந்த ஊரிலுள்ள அனைவருக்கும் தெரிந்து போகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், நாயகன் தனது சபதத்தில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறான் என்பதைச் சொல்கிறது. திடீரென, நாயகன் சந்தித்த இரண்டு காயங்களும் அவனது இயல்பை மாற்றுகின்றன. தனது அவமானத்திற்கு பழிதீர்க்க முயற்சிக்கும்போது, வேறொரு காதல் அவனைப் பற்றுகிறது. இறுதியில் அவனது முயற்சிகள் வெற்றி பெற்றதா என்பதே இப்படத்தின் கதை.

கேட்பதற்கு சாதாரண கதையாக இருந்தாலும், வித்தியாசமான அணுகுமுறையால் மலையாளத்தில் பெருவெற்றியைப் பெற்றது மகேஷிண்டே பிரதிகாரம். இப்படத்தில் நாயகனுடன் கூடவே வரும் ஒரு வயதான பாத்திரமும் உண்டு. தமிழில் அந்த பாத்திரத்தை தாங்கப்போகிறவர் எம்.எஸ்.பாஸ்கர்.

பிருந்தாவனம், எட்டு தோட்டாக்கள் என்று எம்.எஸ்.பாஸ்கரின் சமீபத்திய படங்கள், அவரது நடிப்பிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கின்றன. காமெடியும் குணசித்திரமும் கலந்த வேடங்களை அசால்டாக கைக்கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கர், உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து புது ரூட் பிடிப்பார் என்று நம்புவோம்!

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top