கழுத்துப்பகுதியில் உண்டாகும் கட்டி (தைரோக்லோஸல் டக்ட் சிஸ்ட்)யை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை

 கழுத்துப்பகுதியில் உண்டாகும் கட்டி (தைரோக்லோஸல் டக்ட் சிஸ்ட்)யை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் பலரும் கொரோனாத் தொற்றுப் பாதிப்பிற்குள்ளாகி, சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கிறார்கள். பலர் கொரோனாத் தொற்றுப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்புடன் இருக்கிறார்கள். பெண்கள் கருவுற்றிருக்கும் தருணத்தில் கொரோனா குறித்த அச்சத்துடன், அதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உலகளவில் பிறக்கும் ஏழு சதவீத குழந்தைகள் கழுத்தில் சிறிய அளவிலான கட்டிகளுடன் பிறக்கிறார்கள். இவை தைரோகுலோஸல் டக்ட் சிஸ்ட் என மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள் இத்தகைய கட்டியை அகற்ற தற்பொழுது சத்திரசிகிச்சை நல்லதொரு பலனை வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக டொக்டர் கிருஷ்ணகுமார், M.S.,( ENT)., காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணர் அவர்களை சந்தித்தோம்.

தைரோகுலோஸல் டக்ட் சிஸ்ட் என்றால் என்ன?
 
தாயின் வயிற்றில் சிசு உருவாகி வளர்ச்சி அடையும் பொழுது, நாக்கின் உள்பகுதியில் சிறிய அளவில் உண்டாகும் தைராய்டு சுரப்பி, முழுமையாக வளர்ச்சி அடையும் போது, அவை நாவின் உட்பகுதியில் இருந்து தனியே பிரிந்து சென்று கழுத்தின் ஒரு பகுதியில் அமைந்து செயல்படத் தொடங்கும். நாக்கு மற்றும் கழுத்துக்கு இடையே இவை வளர்ச்சி அடையும்போது உதவும் ஒரு மெல்லிய குழாய், நன்றாக வளர்ச்சி அடைந்த பிறகு தானாக மறையும். சில குழந்தைகளுக்கு இத்தகைய குழாய் மறையாதிருந்து, அந்த குழாயில் நீர்க்கட்டிகள் உருவானால்.. அதனைத்தான் தைரோகுலோஸல் டக்ட் சிஸ்ட் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால் தைராய்டு சுரப்பி உருவான பிறகு, மீதமுள்ள செல்கள் மற்றும் திசுக்களிலிருந்து உருவாகும் கட்டி என குறிப்பிடலாம்.
 
இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
 
பொதுவாக பலருக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இத்தகைய கட்டி குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் வரை கண்டறிய இயலாது. ஆனால் 2 முதல் 10 வயது வரையிலோ அல்லது 10 முதல் 20 வயதிலோ இவற்றின் பாதிப்பை கண்டறியலாம்.மேலும் சிலருக்கு கழுத்து அசைப்பதில் இடையூறு, தொண்டை புண், உணவு விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது கழுத்துப் பகுதியில் கழுத்தின் கீழ் பகுதியில் சிறிய அளவில் கட்டிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து அதுகுறித்த ஆலோசனையை பெற வேண்டும். அதே தருணத்தில் இது ஆண் பெண் என பாலின வேறுபாடு இன்றி பாதிப்பை ஏற்படுத்தும்.
 
இத்தகைய பாதிப்பு Sublingual, Suprahyoid, Infrahyoid, Prelaryngeal ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடும். பொதுவாக பெரும்பாலான குழந்தைகளுக்கு சுப்ராஹயாட் என்ற எலும்புப்பகுதியில் தான் இத்தகைய பாதிப்பு தான் அதிக அளவில் ஏற்படுகிறது. இப்பகுதியில் கட்டி ஏற்படும் பொழுது அவை வீக்கமடைந்து, வலியை உண்டாக்கும். இதன் காரணமாக கழுத்தை பக்கவாட்டிலோ அல்லது மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ அசைக்கும் போது வலி அதிகரிக்கும். சிலருக்கு இதன்போது காய்ச்சல் ஏற்படக்கூடும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறவில்லை என்றால், ஃபிஸ்டுலா எனப்படும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 
இதற்கான அறிகுறிகள் குறித்து..?
 
கழுத்துப்பகுதியில் சிறிய அளவிலான கட்டி ஏற்பட்டு, வீக்கமும் வலியும் இருக்கும். சிலருக்கு அப்பகுதி சிவந்து காணப்படும். சுவாசிப்பதிலும் திரவ மற்றும் திட உணவுகளை விழுங்கும் போது சிரமமும் ஏற்படும். சிலருக்கு இப்பகுதியில் பாதிப்பின் தன்மை அதிகரித்து, அங்கிருந்து நீர் கசிவு ஏற்படக் கூடும். வேறு சிலருக்கு தொற்று பாதிப்பின் காரணமாக இவை அதிகரித்து, ஃபிஸ்டுலா என்ற பாதிப்பையும் உண்டாக்கும்.

எத்தகைய பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்துவார்கள்..?
 
முதலில் மருத்துவர்கள் நோயாளியின் வாயை திறந்து நாவினை உள்ளும் வெளியும் அசைக்கும் பயிற்சியை செய்யும்படி பரிந்துரைப்பார்கள். அதன் போது கழுத்துப் பகுதியில் இருக்கும் அந்த கட்டியில் அசைவுகள் ஏற்பட்டால், அவை தைரோகுலோஸல் டக்ட் கட்டி என அவதானிக்கலாம். பிறகு மருத்துவர்கள் அக்கட்டியின் மீது ஒளியைப் பாய்ச்சி அதன் எதிரொளிப்பையும் கண்டறிவார்கள். பிறகு அல்ட்ராசவுண்ட் என்ற பரிசோதனை மூலம் தைராய்டு சுரப்பியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை உறுதிப்படுத்துவார்கள். பின்னர் கட்டியை உறுதிப்படுத்த எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வார்கள். சிலருக்கு பாதிப்பின் பிறகும் அவை ஃபிஸ்டுலா தானா..! என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள `பிஸ்டுலாகிராம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். வேறு சிலருக்கு தைராய்ட் ஸ்கேன் என்ற பரிசோதனையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இவைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கலாம்.

இதற்கு சத்திர சிகிச்சை தான் சரியான தீர்வா..?
 
இத்தகைய பாதிப்பிற்கு மருந்துகளின் மூலமான நிவாரணத்தை விட சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவது தான் சரியான தீர்வாக அமையும். பரிசோதனைக்குப் பின்னர் அங்கு எத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதனை சத்திரசிகிச்சை நிபுணர்கள் தீர்மானிப்பார்கள். சில பிள்ளைகளுக்கு முழுமையாக அகற்றவேண்டிய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கலாம்.

சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன?
 
சத்திர சிகிச்சைக்குப் பிறகு அங்கு கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான ரத்த கசிவு ஏற்படக் கூடும். மிக அரிதாக சில குழந்தைகளுக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்து 10 நாட்களுக்கும் மேலாக ரத்தக்கசிவு சிறிய அளவில் தொடர்ந்தால், அவர்களுக்கு மட்டும் மீண்டும் சத்திரசிகிச்சை செய்வர். சத்திர சிகிச்சைக்கு பிறகு அங்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறும் உண்டு. சிலருக்கு சத்திர சிகிச்சை செய்து கட்டியை அகற்றிய பிறகு, அவர்களுக்கு ஹைப்போதைராய்டிசம் என்ற பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மரபியல் காரணங்களால் இத்தகைய பாதிப்பு, சத்திர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வரக் கூடும். சிலருக்கு ஃபிஸ்டுலா என்ற பாதிப்பு உண்டாவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்டு இருக்கும் நவீன மருத்துவத் தொழில் நுட்பங்களால் பக்க விளைவுகள் ஏற்படுவது மிக மிக குறைவு என்பதை மனதில் கொள்ளுங்கள். சத்திர சிகிச்சைக்குப் பிறகு 10 நாட்கள் வரை மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மேலும் சத்திர சிகிச்சை முடிந்து ஒரு மாத காலம் வரை கழுத்துப்பகுதியை அதிக அளவில் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது கழுத்தை மேலும் கீழுமாகவோ, வலமும் இடமுமாகவோ அசைப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதே தருணத்தில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் உங்களுடைய பிள்ளைகளின் வயது, அவர்களின் ஆரோக்கியம், அவர்களின் மருத்துவ வரலாறு... ஆகியவற்றை அவதானித்த பிறகு, சத்திரசிகிச்சையை மேற்கொள்வார்கள். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 98402 69996 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top