செரிபரல் அட்றாபி எனப்படும் மூளை சுருக்க பாதிப்பை வராமல் தடுக்கும் சிகிச்சை முறை

செரிபரல் அட்றாபி எனப்படும் மூளை சுருக்க பாதிப்பை வராமல் தடுக்கும் சிகிச்சை முறை

இன்றைய தேதியில் எம்மில் பலருக்கும் முதுமையின் காரணமாக பல உடலியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்திருக்கிறோம் ஆனால் எம்முடைய மூளையில் உள்ள பிரத்யேக நியூரான் செல்களும் முதுமையின் காரணமாக பாதிப்படைகின்றன என்றும், இதனால் எம்மில் பலருக்கும் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், அதிலும் செரிப்ரல் அற்றாபி எனப்படும் மூளை சுருக்க பாதிப்பும் ஒன்று என்பதையும் அறிந்துக்கொள்வதில்லை. இந்நிலையில் செரிப்ரல் அற்றாபி பாதிப்பு குறித்து மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள டாக்டர். அருள் செல்வன், M.D., நரம்பியல் நிபுணர் சந்தித்தோம்.

செரிபரல் அட்றாபி எனப்படும் மூளை சுருக்கப் பாதிப்பு என்றால் என்ன?
 
முதுமையின் காரணமாக ஒவ்வொரு மனிதருக்கும் தோல் பகுதி சுருக்கமடைவதை போன்றும், அவர்களின் தலைமுடி நரைப்பது போன்றும்... மூளையில் தொடர்பில் உள்ள நியூரான் எனப்படும் செல்களும் முதுமையின் காரணமாக தங்களது செயல் திறனை குறைத்துக் கொள்ளும். இந்த நிலையைத்தான் செரிப்ரல் அற்றாபி எனப்படும் மூளை சுருக்கம் என மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் முதுமை தன்மைக்கு ஏற்ப இந்த மூளை சுருக்கம் என்பது இயல்பாகவே நிகழும். எம்மில் சிலருக்கு இத்தகைய பாதிப்பு பிறக்கும் போதோ அல்லது நினைவு திறன் இழப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கோ இவை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம்.
 
செரிபரல் அற்றாபி பாதிப்பும், அதற்கான காரணங்கள் குறித்து..?
 
மூளையில் எம்முடைய உடலின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பு இயங்கி வருகிறது. இதில் எந்த அமைப்பில் அற்றாபி எனும் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப் பொருத்து உடல் உறுப்புகளில் அதன் விளைவுகள் ஏற்படும். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் பாதிப்பு ஏற்படும் போது Parietal Lobe மற்றும் Temporal Lobe ஆகிய இரண்டு பகுதிகளிலுள்ள ‌ நியூரான்கள் பாதிக்கப்பட்டிருக்கும். பார்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாதப் பாதிப்பு ஏற்படும் போதும் சிலருக்கு இத்தகைய அற்றாபி பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மேலும் வேறு சிலருக்கு இந்தப் பகுதியில் அமையப்பெற்றுள்ள செல்கள் டீஜெனரேட் எனப்படும் தங்களது செயல் திறனை படிப்படியாக குறைத்துக் கொண்டு விடும். இதன் காரணமாகவும் இத்தகைய அற்றாபி ஏற்படலாம்.
 
மேலும் சில குழந்தைகளுக்கு பால்ய பிராயத்திலேயே ஏற்படும் மூளை காய்ச்சல் பாதிப்பு காரணமாகவும் இத்தகைய செரிப்ரல் அற்றோபி ஏற்படக்கூடும். அதே தருணத்தில் வேறு சிலருக்கு எந்த வயதிலும் விபத்தின்போது மூளையில் காயம் ஏற்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ அதன் காரணமாகவும் செரிப்ரல் அற்றோபி ஏற்படும் வாய்ப்பு உண்டு.
 
வேறு சிலருக்கு மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்பு பகுதியில் அடைப்பு ஏற்பட்டோ அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டோ பக்கவாத பாதிப்பு ஏற்படலாம். இதன் போதும் சிலருக்கு செரிப்ரல் அற்றோபி பாதிப்பு ஏற்படும்.
 
மேலும் வேறு சிலருக்கு Chronic Traumatic Encephalopathy , Vascular Dementia, cerebral palsy, Focul Brain Atrophy, Generalized Cerebral Atrophy, Progressive Atrophy, Acute Focul Brain Atrophy, Congenital Cerebral Atrophy போன்ற பாதிப்புகளின் போது செரிப்ரல் அற்றாபி பாதிப்பு ஏற்படக்கூடும்.
 
இத்தகைய பாதிப்பின் காரணமாக மூளை சேதமடையக்கூடும். நினைவுத்திறன் இழப்பு, முக வாதம், பார்வைத்திறன் குறைபாடு, கால்கள், தோள்கள் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டில் இடையூறு, பேச்சு மற்றும் கற்றல் திறனில் தாமதம் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். 
 
இதுபோன்ற பாதிப்புகளை எத்தகைய பரிசோதனை மூலம் உறுதிப் படுத்துவார்கள்..?
 
சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன் மற்றும் சிங்கிள் போட்டான் எமிசன் கம்ப்யூட்டரைஸ்டு டோமொகிராபி எனப்படும் SPECT ஸ்கேன் பரிசோதனை மூலம் இதன் பாதிப்பை துல்லியமாக அவதானிப்பார்கள். இத்தகைய பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் Age related cerebral Atrophy என்ற பாதிப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்கள்.
 
ஏஜ் ரிலேட்டட் செரிப்ரல் அற்றாபி எனப்படும் முதுமையின் காரணமாக ஏற்படும் மூளை சுருக்க பாதிப்பை தடுக்க இயலுமா..?
 
இயலும். முதுமையின் காரணமாக எம்முடைய உடலில் ஏற்படுவதை போல் மூளையிலும், அதன் செயல்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இதனை நாம் மருத்துவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலுடன் தள்ளி வைக்க இயலும். ஆரோக்கியமான உணவு முறைகள், அதிலும் குறிப்பாக ஒமேகா 3 சத்துள்ள உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாளாந்தம் மூன்று வேளையும் சமைத்த உணவுகளை உட்கொள்வதை விட, இரண்டு வேளை சமைத்த உணவும் ஒருவேளை சமைக்காத... இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளையும் உட்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் முறைப்படுத்திக் கொள்ளலாம். நாளாந்தம் ஒரு மணித்தியாலம் வரை உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து எட்டு மணித்தியாலம் வரை ஆழ்ந்த உறக்கம் அல்லது நல்ல முறையிலான உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த மூன்று அடிப்படையான விடயங்களை உறுதியாக பின்பற்றினால் மூளை சுருக்க பாதிப்பை தள்ளிப்போடலாம். வராமலும் தற்காத்துக் கொள்ளலாம். 
 
மூளை சுருக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை பற்றி..?
 
வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் இத்தகைய பாதிப்பின் தன்மையைப் பொருத்து, மருத்துவர்கள் பிரத்யேக மருந்தின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 44 4008 0300 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top