நுரையீரல் புற்று நோயிற்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை!

நுரையீரல் புற்று நோயிற்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை!

‘இன்றைய சூழலிலும் எம்மில் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு என்றால், இனம் கண்டறிய இயலாத ஒருவித அச்சம் மனதில் ஏற்படும். புற்று நோய் வந்தால், அதனை குணப்படுத்த இயலாது. உயிரிழப்பு ஏற்படுவது உறுதி என்ற எண்ணமும் உள்ளது. இது தேவையற்ற அச்சம். ஏனெனில் இன்றைய திகதிக்கு மருத்துவ அறிவியல் தொழில்நுட்பம் பாரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அவருக்கு சத்திர சிகிச்சை செய்த பின்னரோ, திசு பரிசோதனை செய்த பின்னரோ தான் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்த இயலும். ஆனால் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் எண்டாஸ்கோப்பி என்னும் நவீன கருவி மூலமாக சத்திரசிகிச்சை ஏதுமின்றி நோயின் பாதிப்பை கண்டறிய இயலும். மேலும் அறிமுகமாகியிருக்கும் நவீன சிகிச்சைகள் மூலம் புற்று நோயின் தாக்குதலிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெற இயலும்.’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் டாக்டர் சுரேந்திரன், M.D.,R.T., புற்றுநோய் சிகிச்சை நிபுணர். இவரிடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டால் அதற்காக அறிமுகமாகியிருக்கும் நவீன சிகிச்சை குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த விளக்கம் இதோ..

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவது எப்படி?  அதனை உறுதிப்படுத்திக் கொள்ள எத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?
 
கடந்த ஓராண்டிற்கு மேலாக அனைவரின் முழு கவனமும் கொரோனாவை மையப்படுத்தித்தான் இருக்கிறது. இந்நிலையில் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 13.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதில் 8.5 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதிலும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் எண்ணிக்கை அதிகம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. புகையிலை பாவனைக்கு ஆளானவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்கள் தான் கொரோனாத் தொற்றுக்கு எளிதில் இலக்காகி இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறும் அதிகம்.
 
வாழ்க்கைமுறை, உணவு முறை, சுற்றுச்சூழல் என பல காரணங்களாலும், காற்று மாசு, சிகரட் புகை, ரேடான் வாயு, மரபியல் காரணிகள் ஆகிய காரணங்களாலும் ஒருவருக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படக்கூடும். வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, புற ஊதாக்கதிர்கள்,  கதிர்வீச்சுக்கள், புகையிலை பாவனை போன்றவற்றின் காரணமாக நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக நுரையீரல் புற்றுநோய், பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் என்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் பெண்களும் கல்வி, வேலை, வாழ்வாதாரம் என பல்வேறு காரணங்களால் அவர்களும் புறச்சூழலில் பணியாற்றுவதால் காற்று மாசு, வாகன மாசு, புகையிலை மாசு, புகை போன்ற பல காரணங்களால் அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறது. நுரையீரலுக்குள் செல்லும் சிகரட் புகை, அங்கு உள்ள செல்களை பாதித்து, அவற்றின் வளர்ச்சியை அசாதாரணமாக்கி புற்றுநோயை உண்டாக்குகிறது.
 
தொடக்க நிலையில் நுரையீரல் புற்று நோயை கண்டறிவது கடினம். சாதாரண சுவாசத் தொற்று என பலரும் கருதுவது தான் இதற்கான காரணம். புற்றுநோய் கட்டி உண்டாகி வளர்ந்த பிறகு அல்லது நோய் முற்றிய பிறகுதான் கண்டறியப்படுகிறது. தொடக்க நிலையில் கண்டறிந்தால் நுரையீரல் புற்றுநோயை எளிதாக குணப்படுத்தலாம். தொடக்க நிலையில் எந்தவித அறிகுறியும் வெளிப்படுத்துவதில்லை. வேறு வகையினதான உடல் பாதிப்பு ஏற்படும் போது செய்துகொள்ளும் எக்ஸ்ரே பரிசோதனையின்போது நுரையீரல் பகுதியில் ஏதோ பாதிப்பு இருப்பது தெரியவரும்.
 
இதற்கான அறிகுறிகள்..?
 
தொடர் இருமல், சிலருக்கு இருமலின் போது ரத்தம் வெளியேறுதல், மூச்சுத் திணறல், காய்ச்சல், நெஞ்சு வலி, உடல் எடை இழப்பு, பசியின்மை போன்றவையே நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும். வேறு சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் முற்றியிருந்தால், அவர்களுக்கு தலைச்சுற்றல், பக்கவாதம், மஞ்சள் காமாலை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் இதன்போது ஸ்கேன் பரிசோதனை செய்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு, அது உடலின் பல பாகங்களுக்கும் பரவி இருப்பதை உறுதிப்படுத்தலாம்.
 
சிகிச்சை,,?
 
தொடக்க நிலையில் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டால் சத்திரசிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். அதன் பிறகு கீமோதெரபி என்ற சிகிச்சையின் அளித்து குணப்படுத்தலாம். இவ்விரண்டு சிகிச்சையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், கதிரியக்க சிகிச்சை முறை என்ற சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் துல்லியமாக கதிர்வீச்சு செலுத்தி புற்றுநோய் செல்களை அழித்து விடலாம்.
 
இதில் ஏதேனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறதா..?
 
நுரையீரல் புற்றுநோயின் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஏற்பட்டால், அவர்களை குணப்படுத்துவதற்காக மற்றும் முழுமையான நிவாரணமளிப்பதற்காக Stereotactic Body Radiation Therapy என்ற நவீன கதிரியக்க சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இத்தகைய சிகிச்சை துல்லியமான அளவில், புற்றுநோய் கட்டிகளின் மீது, நுட்பமான முறையில் கதிர்வீச்சுகளை செலுத்தி, புற்றுநோய் கட்டிகளை அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களை எந்த வகையிலும் பாதிக்காமல் அகற்றும் நவீன கதிரியக்க சிகிச்சை. இதன் சிறப்பம்சம் என்னவெனில், ஐந்து செ. மீ. க்கு குறைவான அளவில், ஒன்று அல்லது இரண்டு உறுப்புகளில் புற்றுநோய் கட்டிகள் தோன்றினாலும் கூட, அதனை இத்தகைய சிகிச்சை மூலம் சீராக்க இயலும். புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி இரண்டு செ.மீ. க்கும் குறைவாக இருந்து உடலின் ஒரு உறுப்பிலோ அல்லது ஒரே உறுப்பின் இரண்டு இடங்களில் இருந்தாலோ இத்தகைய சிகிச்சையை அளித்து, முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும். கீமோதெரபி சிகிச்சை வழங்கி, நோயின் தீவிரத்தை குறைத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு, இத்தகைய சிகிச்சை அளித்து அவர்களின் புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்க இயலும். இதனை நுரையீரல் புற்றுநோயிற்கும் மட்டுமல்லாமல் கல்லீரல் புற்றுநோயிற்கும் சிகிச்சையளிக்க இயலும். 

இத்தகைய சிகிச்சை ஏதேனும்  பக்கவிளைவை ஏற்படுத்துமா?
 
இந்த சிகிச்சை, சத்திரசிகிச்சையற்ற ஒரு சிகிச்சைமுறை. வைத்தியசாலையில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையை பெறலாம். புற்றுநோய் செல்கள் மட்டுமே அழிக்கப்படுவதால் விரைவான நிவாரணம் கிடைக்கிறது. இந்த நவீன கதிரியக்க சிகிச்சை Linear Accelerator மற்றும் Proton Beam என்ற இரண்டு வகையில் அறிமுகமாகியிருக்கிறது. இதில் லீனியர் ஓக்சிலேற்றரர் என்ற தொழில்நுட்பத்தில், Active Breathing Coordinator மற்றும் moderate Deep Inspiration Hold Techniques போன்ற பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் இருப்பதால் நோயாளிக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது. 
 
புற்றுநோய் மீண்டும் வந்தால் அதனை குணப்படுத்த இயலுமா..?
 
நிச்சயமாக இயலும். பெரும்பாலும் மீண்டும் தோன்றும் புற்றுநோய், மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் முதுகுத்தண்டின் பக்கவாட்டு பகுதியில்தான் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டால், அவற்றை புற்றுநோயின் நான்காம் நிலை என வரையறைபடுத்தி, அதனை குணப்படுத்த இயலாது என்றும், Palliative Care எனப்படும் வலி நிவாரண சிகிச்சை மட்டுமே வழங்க இயலும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது கீமோதெரபி மூலமாகவும், நவீன ரேடியேஷன் தெரபி மூலமாகவும் மீண்டும் முழுமையான நிவாரணத்தை வழங்கிட இயலும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் 0091 8939900500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top