தோல் புற்றுநோயிற்கு நிவாரணமளிக்கும் எலக்ட்ரான் தெரபி!

தோல் புற்றுநோயிற்கு நிவாரணமளிக்கும் எலக்ட்ரான் தெரபி!

‘உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை உடலின் வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் செல்கள் தேவைக்கேற்ப வளருகின்றன. உடல்நலம் கெடும்போது செல்கள் சில இடங்களில் தேவையான அளவினைக் காட்டிலும் அதிகமாக செல்பிரிதல் நடைபெற்று துன்பங்களை உருவாக்குகின்றன. இப்படி உருவாகும் செல்கள் உண்மையில்துன்பங்களை நேரடியாக உண்டாக்குவதில்லை. ஆனால் அளவிற்கு அதிகமாக உற்பத்தியாகி ஒரேயிடத்தில் தங்கிவளர்வதால் வேறு சில தொல்லைகளை உருவாக்குகின்றன.  உதாரணத்திற்கு இவை தொண்டையில் வளர்ந்தால்விழுங்குவதற்கு சிரமம் உண்டாகும். வயிற்றில் இருந்தால் வயிற்றில் வலி ஏற்படும். உடலில் எந்த இடங்களில் இவைகள் புற்றுநோயாக மாறுகின்றனவோ அதை வைத்து அடினோமா, லிப்போமோ, ஹீமோட்டோமா, கார்சினோமா, எபிதிலியோமா, ஃபைபிரோமா என பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன. அதேப்போல் புற்றுநோய் கட்டிகள் தீங்கு  விளைவிக்கும் கட்டி தீங்கற்ற கட்டி என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். இதனை உரிய பரிசோதனை முறையில் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையளித்து குணப்படுத்துகிறோம்.’ என்று எம்முடன் புற்றுநோயைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டே இயல்புடன் பேசத் தொடங்குகிறார் டாக்டர் சுகேஸ்வரன். இவர் மதுரையில் செயல்பட்டு வரும் வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்று நோயை குணப்படுத்துவதில் அல்லது நிவாரணமளிப்பதில் கதிர்வீச்சு சிகிச்சையின் பங்களிப்பு குறித்து..?

இன்றைய சூழலில் அனைத்து வகையினதான புற்றுநோய்க்கும் ரேடியேசன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை எண்பது சதவீதத்திற்கும் மேலான நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்வகையினதான சிகிச்சை புற்றுநோயின் தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் போது குணமடைவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு புற்றுநோயிற்கான சத்திர சிகிச்சை செய்தபின்னர் அவருக்கு முழுமையான நிவாரணமளிப்பதற்காகவும் இவ்வகையினதான சிகிச்சை வழங்கப்படுகிறது. அதாவது புற்றுநோயை குணப்படுத்துவதற்கும் அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் கதிர்வீச்சு சிகிச்சை முக்கியமானதாக திகழ்கிறது. அதே போல் ஒரு சிலருக்கு குணப்படுத்த இயலாத அல்லது முற்றிய நிலையிலுள்ள புற்றுநோயின் காரணமாக உண்டாகும் கடுமையான வலிக்கான நிவாரண சிகிச்சையாகவும் அதாவது வலி தணிப்பு சிகிச்சையாகவும் கதிர்வீச்சு சிகிச்சை அவசியமாகிறது.

புற்றுநோயிற்கான சிகிச்சை முறைகளைப் பற்றி..?

அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி ஆகிய மூன்று சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருக்கிறது. இந்த மூன்று சிகிச்சைகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து புற்றுநோயின் நிலையைப் பொருத்து வழங்கப்படுகிறது.ஒரு சில புற்றுநோய்களுக்கு தொடக்ககட்ட சிகிச்சை சத்திர சிகிச்சையாகவும், அதன்பின்னர் கதிர்வீச்சு சிகிச்சையாகவும் இருக்கும். வேறு சில புற்றுநோய்களுக்கு முதல் கட்ட சிகிச்சையாக கதிர்வீச்சு சிகிச்சையும் கீமோதெரபியும் தேவையானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு மார்பக புற்றுநோயாக இருந்தால் முதல்கட்ட சிகிச்சையே அறுவை சிகிச்சை தான். அதற்கு பிறகு அவசியப்பட்டால் கீமோதெரபி. அதற்கு பின்னரே கதிர்வீச்சு சிகிச்சை தரப்படக்கூடும். அதே சமயத்தில் மார்பகபுற்றுநோயின் பாதிப்பு காரணமாக மார்பகங்களை அப்புறப்படுத்தவேண்டும் என்றால் முதலில் சத்திர சிகிச்சையும் பின்னர் கீமோதெரபியுடன் கதிர்வீச்சு சிகிச்சையையும் இணைந்து வழங்குவார்கள்.

அதே போல்மலக்குடல் புற்றுநோய் மற்றும் ப்ரைய்ன் ட்யூமர் எனப்படும் மூளை கட்டிக்கும் முதலில் சத்திரசிகிச்சையும் பின்னர் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபியும் வழங்கப்படுகிறது.

தோல் புற்றுநோயிற்கான சிகிச்சை குறித்து..?

தோல் தொடர்பான புற்றுநோய் வந்தால் அந்த பாதிப்பின் தன்மையைப் பொறுத்து கதிர்வீச்சு சிகிச்சையைத்தான் முதலில் மேற்கொள்வார்கள். தற்போதைய சூழலில் எலக்ட்ரான் தெரபி என்றதொரு கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தோல்சம்பந்தமான புற்றுநோய்களுக்கு இவ்வகையினதான சிகிச்சை தான் வழங்கப்படுகிறது.

உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே ஏன்?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான புற்றுநோய்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குடல் மற்றும் இரைப்பைத் தொடர்பான புற்றுநோய்கள் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. எம்முடைய தெற்காசியாவைப் பொறுத்த வரை பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துகொண்டே வருகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இருந்தாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமடைவதில் ஏனைய நாட்டினரைக் காட்டிலும் தெற்காசியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புற்றுநோய் பாதிப்பிற்கு பின்னர் நாம் மாற்றியமைத்துக் கொள்ளும் வாழ்க்கை நடைமுறைகள் தான். அதேசமயத்தில்இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்தால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறையும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவுடன் அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்று குணமடையவும் வாய்ப்பு உருவாகும்.

தற்போது வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் ஆகிய புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை அனைத்து கிராமப்பகுதிகளிலும் இந்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால் மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு சரியான முறையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆண்டுக்கொரு முறை இதற்கான பரிசோதனை செய்து கொண்டால் அனைவருக்கும் நல்லது.

கதிர்வீச்சு சிகிச்சை என்றாலே பக்கவிளைவுகள் இருக்கும் என்கிறார்களே அது குறித்து..?

கதிர்வீச்சு சிகிச்சை மட்டுமல்ல எல்லாவித சிகிச்சைகளுக்கும் சிறிய அளவிலான பக்கவிளைவுகள் என்பது இருக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயிற்காக அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையின் போது ஒரு சிலருக்கு வாந்தி, உடல் சோர்வு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.ஆனால் இவையனைத்தையும் உரிய மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்திவிடலாம். ஒரு சிலர் இந்த பக்கவிளைவிற்கு பயந்து சிகிச்சையே எடுக்காமலிருப்பார்கள். அப்படியிருக்கவேண்டியதில்லை.

புற்றுநோய் பாதித்த ஒருவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை கொடுத்த பின்னர் மீண்டும் அவருக்கு அதே மாதிரியான சிகிச்சை தேவைப்படுமா?

தற்போது வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சைகள் முழுவதும் பாதுக்காக்கப்பட்ட பக்கவிளைவுகளற்ற எக்ஸ் றே கதிர்கள் மற்றும் காமாக் கதிர்களை அடிப்படையாக கொண்டவையே. அதேசமயத்தில் ரேடியேசன் எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சையின் நோக்கத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவருடைய உடலில் ஓரிடத்தில் புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தால், அதனை அப்புறப்படுத்தி மீண்டும் அந்த இடத்தில் புற்று நோய் கட்டி உருவாகாமல் தடுப்பதும் மற்றும் பாதுகாப்பதும் தான் இந்த சிகிச்சையின் அடிப்படை. ரேடியேசன் தெரபியில் Local Control and Disaster Control என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் எது சிறந்ததே எது அவசியப்படுமோ அதனை வழங்குவார்கள். பெரும்பாலும் புற்றுநோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து தான் இவ்வகையினதான சிகிச்சை வழங்குவார்கள்.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 8971613993 அல்லது 0091 90036 94127 மற்றும் sugashsmc@gmail.com

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top