கிளஸ்டர் தலைவலியை குறைக்கும் முழுமையான நிவாரண சிகிச்சை

கிளஸ்டர் தலைவலியை குறைக்கும் முழுமையான நிவாரண சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் பலருக்கும் பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்பட்டு. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி. மனித ஆற்றலை வீணடிக்கிறார்கள்/ தலைவலி என்பது, ஒருமுக தன்மையை குறைத்து, எம்முடைய மனிதவளத்தை திசை திருப்பிவிடும் வலிமை வாய்ந்தது. இதனால் தலைவலி ஏற்பட்டவுடன் பலரும் பதட்டமடைகிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நிவாரண சிகிச்சை குறித்து அறிந்து கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் கிளஸ்டர் தலைவலி எனப்படும் ஒற்றைத் தலைவலியை பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக டாக்டர் வேணி, M.D., D.M., நரம்பியல் நிபுணர், அவர்களை சந்தித்தோம்.

தலைவலிகளில் கிளஸ்டர் தலைவலி என்றால் என்ன..?
 
எம்மில் பலரும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலியைப் பற்றி ஓரளவிற்கேனும் தெரிந்து வைத்திருப்பர். ஒருபக்கமாக ஏற்படும் தலைவலியை ஒற்றைத்தலைவலி என்றும் தெரிந்து வைத்திருப்பர். ஆனால் ஒரு பக்கமாக ஏற்படும் அனைத்து தலைவலியும் மைக்ரேன் தலைவலி அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மைக்ரேன் தலைவலி போல் ஒற்றைத் தலைவலியாக ஏற்படுவது தான் கிளஸ்டர் தலைவலி.
 
கிளஸ்டர் தலைவலி என்பது, தலைவலி ஏற்பட்ட சில வினாடிகளிலேயே கொத்துக்கொத்தாக பரவி தலைவலியை அதிகரித்துக்கொண்டே செல்லும். திடீரென்று தலைவலி ஏற்பட்டு அவை பரபரவென்று அதிகரிப்பதால் மக்கள் பதற்றமடைந்து சோர்வடைந்து விடுவார்கள்.
 
சில நோயாளிகளுக்கு இந்த கிளஸ்டர் தலைவலி வலது புறம் அல்லது இடதுபுறம் மட்டுமே ஏற்படும்.  இத்தகைய தலைவலி ஏற்பட்டால், அவை மீண்டும் மூன்று மாதம் கழித்து அல்லது மூன்றாண்டுகள் கழித்து வலது புறம் அல்லது இடது புறம் மட்டுமே மீண்டும் ஏற்படக்கூடும். இடதுபுறம் தாக்கினால் அவை மீண்டும் இடதுபுறம் மட்டுமே தாக்கும். ஆனால் மைக்ரேன் என்ற தலைவலி எந்த பக்கத்தை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும்.
 
அதேபோல் நோயாளி ஒருவருக்கு ஏதேனும் பருவநிலையில் இத்தகைய தலைவலி ஏற்பட்டால்.. மீண்டும் அதே பருவநிலையில் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படும். உதாரணத்திற்கு டிசம்பர் மாத பனி காலத்தில் ஒருவருக்கு இத்தகைய கிளஸ்டர் தலைவலி ஏற்பட்டால்.., மீண்டும் அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் டிசம்பர் மாதம் பனிக் காலத்தில்தான் அவை மீண்டும் ஏற்படும்.
 
இத்தகைய கிளஸ்டர் தலைவலி ஏற்பட்டால் 15 நிமிடங்களில் இருந்து மூன்று மணித்தியாலம் வரை நீடித்து அதன் பிறகு மறையும். முதலில் இத்தகைய தலைவலி கண்களை சுற்றி வலியை ஏற்படுத்த தொடங்கும். அதன் பிறகு அது மெல்ல பரவி, வலது புறமோ அல்லது இடது புறமோ கண்களைச் சுற்றிய தலைப்பகுதி வரை நீளும். எந்தக் கண்ணில் வலி ஏற்பட்டதோ அந்த கண்ணிலிருந்து நீர் வரும். அந்த கண்ணுக்கு அருகில் இருக்கும் மூக்கிலிருந்தும் நீர் வடியும். பெரும்பாலான தருணங்களில் இதனை எதிர்கொள்வதில் நோயாளிகள் பதட்டமடைவார்கள். மைக்ரேன் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை அமைதியாக எதிர்கொண்டு இருட்டான அறையை தெரிவு செய்து உறங்கி விடுவார்கள்.

கிளஸ்டர் தலைவலி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் என்ன..?
 
ஏதேனும் ஒரு கண்ணில் வலி ஏற்பட தொடங்கி, அவை ஒருபக்கம் மட்டுமே பரவும். கண்களிலிருந்து கூடுதலாக கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கும். சிலருக்கு கண்கள் சிவந்து போகும். அவர்களின் மூக்கில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். கண்ணுக்கு அருகில் உள்ள பகுதியில் வீக்கம் ஏற்படக்கூடும். ஐ லிட் எனப்படும் மேல் இமையின் மேற்பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும். சோர்வும், கடுமையான பதற்றமும் ஏற்படக்கூடும். சிலருக்கு இரவு நேரங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.
 
இத்தகைய தலைவலியுடன் காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தியும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். வேறு சிலருக்கு இத்தகைய தலைவலியுடன் மனக்குழப்பம், கழுத்துப்பகுதி கடினமாதல், உணர்வின்மை, பேசுவதில் சிரமம் போன்ற நிலை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இதனைப் புறக்கணித்தால் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். சிலருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய அறிகுறிகளை வெளிப்படும் என்பதால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

கிளஸ்டர் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?
 
மரபணு மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பே இத்தகைய தலைவலி உண்டாவதற்கான முதன்மையான காரணங்கள் எனலாம். கிளஸ்டர் தலைவலியால் பாதிக்கப்பட்டப் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அத்தகைய பாதிப்பு 5 முதல் 18 மடங்கு வரை வருவதற்கான சாத்தியக்கூறு உண்டு என அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. வேறு சிலருக்கு புகை பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு.
 
இதற்கான பரிசோதனையும், சிகிச்சையும் என்ன..?
 
மூளையின் நரம்பியல் அமைப்பு குறித்து எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவர். பின்னர் மருத்துவர்கள் நோயாளியின் குடும்ப மருத்துவ வரலாறு முழுமையாக தெரிந்து கொண்டு, அவர்களுக்கு இத்தகைய பாதிப்பின் காரணங்களை வகைப்படுத்துவர். பிறக எம்மாதிரியான சிகிச்சையை பெற வேண்டும் என்பது குறித்தும், இதனை வராமல் தடுப்பதற்காக எம் மாதிரியான சிகிச்சையை தொடர வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கமளிப்பார்கள்.
 
சிலருக்கு ஓக்சிஜன் தெரபி என்ற சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்குவார்கள். இதற்காக கண்டறியப்பட்டு இருக்கும் பிரத்யேக மருந்துகளின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். மேலும் சிலருக்கு Non-invasive Vagus Nerve Stimulation என்ற சிகிச்சை மூலம் கிளஸ்டர் தலைவலியைத் தூண்டும் நரம்பியல் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் சீராக்குவார்கள். தற்போது டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் மற்றும் ஓக்ஸிபிடல் நரம்பு தூண்டுதல் போன்ற புதிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த கூடிய சாத்தியக் கூறு குறித்து இறுதிக்கட்ட ஆய்வும் நடைபெற்று வருகிறது. இதனை வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களது தூக்கத்தை ஒழுங்குப்படுத்தி, அதனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் மது அருந்துவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்  0091 80564 01010 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top