கெண்டைக்கால் வலி (Calf Pain)-க்குரிய முழுமையான நிவாரண சிகிச்சை

கெண்டைக்கால் வலி (Calf Pain)-க்குரிய முழுமையான நிவாரண சிகிச்சை

எம்மில் பலருக்கும் கெண்டைக்காலில் வலி ஏற்படுவதை உணர்ந்திருப்போம். சிலர் இதற்கான வலி நிவாரண சிகிச்சையையும் பயன்படுத்தி முழுமையான நிவாரணத்தை பெற்றிருப்பார்கள். சிலர் கெண்டைக்கால் வலியை புறக்கணிப்பர். இவர்களுக்குத்தான் நாளடைவில் வலியின் பாதிப்பு அதிகரித்து, நடக்க இயலாத அல்லது நாட்பட்ட வலியை ஏற்படுத்தும். இந்நிலையில் இது குறித்தும், இதற்கான நிவாரண சிகிச்சைக் குறித்தும் தெரிந்து கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராஜ் கண்ணா M.S., Orthopaedic surgeon, அவர்களை சந்தித்தோம்.

காஃப் பெயின் (Calf Pain) எனப்படும் கெண்டைக்கால் வலி குறித்து..?
 
உலகளவில் 75 சதவீதத்தினர் இத்தகைய வலியை தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் எதிர்கொண்டிருப்பர். விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய வலியை சந்தித்து, அதற்கு சிகிச்சையெடுத்து கொண்டிருப்பார்கள். கெண்டைக்கால் என்பது  Gastrocnemius மற்றும் Soleus என இரண்டு தசைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவை Achilles Tendon எனப்படும் குதிகால் தசை நாருடன் இணைந்து செயல்படுகிறது. இவ்விரண்டு தசைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது தசை பலவீனம் போன்ற பல காரணங்களால் ஏற்படும் வலியே கெண்டைக்கால் வலி என வரையறை செய்யப்படுகிறது.
 
இதற்கான அறிகுறிகள் என்ன?
 
இப் பகுதியில் ஏற்படும் வீக்கம், இயல்பான வெப்பத்தை விட கூடுதலாக குளிர்ந்திருப்பது போன்ற உணர்வு, சிவந்து காணப்படுதல், பாத பகுதியில் கூச்ச உணர்வு, மரத்துப் போனது போன்ற உணர்வு, கால்கள் பலவீனமடைதல், அவ்விடத்தில் பிரத்யேக நிணநீர் போன்ற திரவம் தங்குதல் போன்ற அறிகுறிகளின் மூலம் இதனை உணரலாம். 
 
இதற்கான காரணம் என்ன?
 
Electrolyte imbalance எனப்படும் உடலில் உப்பின் அளவில் ஏற்படும் சமச்சீரற்ற நிலையே இதன் முதன்மையான காரணம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (ஓஞ்சியோபதி, நியூரோபதி, மஸ்குலோபதி), நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள், மெய்நிகர் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள், DOMS (Delayed Onset Muscle Soreness) என்ற பாதிப்பு, Tenosynovitis எனப்படும் நீர் கோர்க்கும் பாதிப்பு, எலும்புகளின் அடர்த்தி தொடர்பான இடையூறுகள், திடீரென்று நடைப்பயிற்சி அல்லது தடகள பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் Stress Fracture எனப்படும் பாதிப்பு காரணமாகவும் கெண்டைக்கால் வலி ஏற்படக்கூடும்.
 
சில நிமிடங்கள் வரையிலோ அல்லது சில மணித்துளிகள் வரை நீடிக்கும் தசைப்பிடிப்பு, சிலருக்கு நீர் சத்து குறைவு காரணமாகவும், தசைப்பகுதிகளில் ஏற்படும் காயங்கள் காரணமாகவும், mineral deficiency எனப்படும் உடலுக்கு தேவையான கனிம சத்து பற்றாக்குறை காரணமாகவும், தசை பிடிப்பு ஏற்பட்டு கெண்டைக்கால் வலி உண்டாகும். வேறு சிலருக்கு சிறுநீரக செயலிழப்பு, ஹைப்போ தைராய்டிசம், மது அருந்தும் பழக்கம், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், நாட்பட்ட ரத்த நாள பாதிப்பு போன்ற பல காரணங்களால் தசைப்பிடிப்பு ஏற்பட்டு, கெண்டைக்கால் வலி உருவாகும்.
 
தடகள ஓட்டம், நீச்சல், பளு தூக்குதல், மெய்நிகர் விளையாட்டு போன்ற பல விளையாட்டுகளில் ஈடுபடும் போது எதிர்பாராமல் ஏற்படும் தசை நார் விலகல் மற்றும் தசை புண்களின் காரணமாகவும் கெண்டைக்கால் வலி ஏற்படும். குதிகாலில் உள்ள தசை நார் பகுதியில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும் கெண்டைக்காலில் வலி உண்டாகும். மூட்டுக்கு கீழ் உள்ள கால் பகுதி முழுவதும் இருக்கும் சயாடிக் நரம்புகளின் செயல்பாடு, இயங்கு திறன் போன்றவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் கெண்டைக்கால் வலி உண்டாகும்.கெண்டைக்கால் பகுதியில் உள்ள தோல், தசை, எலும்பு ஆகிய பகுதிகளில் திடீர் என்று ஏற்படும் காயத்தின் காரணமாகவும் வலி ஏற்படக்கூடும்.
 
Diabetic peripheral neuropathy எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு பாதிப்பின் காரணமாகவும், அவர்களின் கெண்டைக்கால் மற்றும் கால் பகுதியில் வலி ஏற்படக்கூடும். இதன்போது வலி திடீரென்று ஓர் இடத்தில் தோன்றும். அவை தாங்க இயலாத வலியை உண்டாக்கும். சிலருக்கு தசை பலவீனமடைந்து வலி ஏற்படும். சிலருக்கு இதன் போது கால்களால் நடக்க இயலாமல் தடுமாற்றம் ஏற்படும். சிலருக்கு ஒரு காலில் இயல்பான வெப்பநிலையும், மற்றொரு காலில் மாறுபட்ட வெப்பநிலையும் ஏற்படும். இதன் காரணமாக அவர்களுக்கு கெண்டைக்கால் பகுதியில் வலி உண்டாகும்.
 
Deep vein thrombosis எனப்படும் ரத்த உறைவின் காரணமாகவும் கெண்டைக்கால் மட்டுமல்லாமல் தோள்பட்டை, கால், மூட்டு, கணுக்கால் மூட்டு போன்ற பகுதிகளிலும் வலி ஏற்படக்கூடும். இதன் போது அப்பகுதியில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு வீக்கத்துடன் தோலில் நிறமும் மாறலாம். Compartment syndrome எனப்படும் நோயின் காரணமாகவும் கெண்டைக்காலில் வலி உண்டாகும். இதன்போது கெண்டைக்காலில் வலி அதிகமாக இருக்கும். சிலரால் கால்களை அசைக்க கூட இயலாது. அப்பகுதியில் திடீரென்று வீக்கம் ஏற்படும்.
 
மெக்கானிக்கல் பெயின் எனப்படும் கால்கள் இயக்கத்திற்குரிய தொழில்நுட்பத்தில் ஏற்படும் இடையூறுகள் காரணமாகவும் வலி ஏற்படும். எலும்பிற்கு அருகிலுள்ள ரத்த நாளங்கள், நரம்புகள் இதில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும் கெண்டைக்கால் வலி ஏற்படக்கூடும். மேலும் வேறு சிலருக்கு காரணங்கள் கண்டறியாத வகையிலும் வலி ஏற்படக்கூடும்.
 
இதற்கான பரிசோதனைகள் என்ன?
 
சிலருக்கு எக்ஸ்ரே மூலமாகவும், மிகச் சிலருக்கு எம்ஆர்ஐ மற்றும் பி டி ஸ்கேன் மூலமாகவும் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து கண்டறிவார்கள்.

சிகிச்சை என்ன ?
 
பரிசோதனைகளின் மூலம் கெண்டைக்கால் வலிக்கான காரணத்தை கண்டறிந்து, பின் அதற்கான சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். சிலருக்கு பிரத்யேக உணவின் மூலமாக முழுமையான நிவாரணம் கிடைக்கும். வேறு சிலருக்கு பிரத்யேக காலுறை அணிவதன் மூலமாக இதன் வலியை குறைக்க இயலும். வேறு சிலருக்கு தண்ணீர் சிகிச்சை மூலம் இதற்கான நிவாரணத்தை வழங்குவார்கள். இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக உடற்பயிற்சியையும் மேற்கொண்டால், வலியிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம். தற்போது Chiropractic Treatment எனப்படும் சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. இதன்போது வலியுள்ள பகுதிகளில் லேசர் கருவிகளால் சிகிச்சை அளித்து, வலியை குறைப்பார்கள். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9626262952 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top