மத்திய அரசை கண்டித்து நடத்தப்பட்ட நாடு தழுவிய போராட்டத்தில் மதுரையில் 1500 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து நடத்தப்பட்ட நாடு தழுவிய போராட்டத்தில் மதுரையில் 1500 பேர் கைது

நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 1500 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சிஐடியு மாநிலச் செயலர் வி.பிச்சை, மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.தெய்வராஜ், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் நந்தாசிங், எம்எல்எப் துணைப் பொதுச்செயலர் மகபூப்ஜான், ஐஎன்டியுசி மாவட்டச் செயலர் கே.எஸ்.கே.குமார், எல்டிஎப் மாவட்டச்செயலர் போஸ், எச்எம்எஸ் மாவட்டச் செயலர் ஆர்.கேசவன் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக ரயில்நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். இதில் ரயில்நிலையம் முன்பாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், தொழிற்சங்கத்தினரை தடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மறியலுக்கு முயன்ற பெண்கள் 130 பேர் உள்பட தொழிற்சங்கத்தினர் 735 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

ரயில் மறியல்: மதுரை ரயில் நிலையத்துக்கு வெளியே போலீஸார் கண்காணிப்பில் இருந்த நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலர் கோபி, மாணவர் சங்கச் செயலர் செல்வா உள்ளிட்ட 8 பேர் ரயில் நிலையத்துக்குள் சென்றனர். அங்கு முதலாவது நடைமேடையில் புறப்படத் தயாராக இருந்த ரயில் என்ஜின் மீது ஏறி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில்வே போலீஸார் அவர்களை குண்டுகட்டாக இறக்கி கைது செய்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம்: திருநகரில் சிஐடியு மாவட்ட துணைச்செயலர் எஸ்.எம்.பாண்டி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் சி.முத்துராணி ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 107 பேரை திருநகர் போலீஸார் கைது செய்தனர்.

மேலூர்: மேலூரில் சிஐடியூ நிர்வாகிகள் ஏ.அய்யணப்பிள்ளை, எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் என்.பழனிச்சாமி உள்பட தொழிற்சங்கத்தினர் 138 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவை தவிர மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், தே.கல்லுப்பட்டி, சமயநல்லூர், உசிலம்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மறியலுக்கு முயன்ற தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். ஊரகப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் மறியலில் பங்கேற்ற 90 பெண்கள் உள்பட 750 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top