சௌராஷ்டிரா சமூக மாணவர்களால் எடுக்கப்பட்ட "தி வத்தோ"

சௌராஷ்டிரா சமூக மாணவர்களால் எடுக்கப்பட்ட \

நம் சமுதாயத்தில் தற்போது வளர்ந்துவரும் முன்னேற்றத்தாலும் பெருகிவரும் தொழில்சார் வளர்ச்சிகளாலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.  அதிலும், காதலினால் ஏற்படும் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

கலப்பு திருமணங்கள் ஒரே மொழி பேசும் வெவ்வேறு பிரிவினருக்கு இடையே நடைபெற்றால் அவர்களின் உணர்வுகளை பரிமாற்றிக்கொள்ள மொழி ஒரு தடையாக இருக்காது. தாய்மொழி என்பது தன்னுடைய ஆசாபாசங்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும். ஆகையால் ஒரே மொழி பேசுபவரிடையே நடக்கும் கலப்புத் திருமணத்தில் குறைந்தபட்சம் அவர்களது இன்ப துன்பங்களையாவது தங்களது தாய்மொழியில் உணர்வுப்பூர்வமாக பேசி தீர்த்துக்கொள்வர்.

ஆனால், வெவ்வேறு மொழி பேசும் மக்களிடையே ஏற்படும் கலப்பு திருமணங்களில் தங்களின் உணர்வுகளை தங்களின் தாய்மொழியில்லாமல் வேறொரு மொழியில் வெளிப்படுத்துவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். இதுமட்டுமில்லாமல், அவர்களின் சந்ததியினருக்கும் இது மிகப்பெரியளவில் பாதிப்பினை உண்டாக்கும்.

இக்கருத்தினை மையமாகக் கொண்டு, சௌராஷ்டிரா சமூக பெண்ணிற்கும் தமிழ் சமூக ஆணிற்கும் ஏற்படும் கலப்பு திருமணத்தின் பிரதிபலிப்பாகவும், அவர்களுக்கு பிறந்த குழந்தை இருமொழி கலந்து பேசினால் உண்டாகும் குழப்பங்களையும் கருவாகக் கொண்டு,  சௌராஷ்டிரா மொழியில் பெயர் சூட்டப்பட்ட குறும்படம் ‘தி வத்தோ‘ (‘இரண்டு மொழிகள்‘). இக்குறும்படத்தின் எடிட்டிங், சினிமேட்டோகிராஃபி வேலைகள் மதுரை மகால் 5-வது தெருவைச் சேர்ந்த இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. இப்படத்தினை குறும்பட இயக்குனர் தினேஷ் மற்றும் அவருடைய குழுவினர் மிக அழகாக எடுத்துரைத்துள்ளனர். இதுபோன்றதொரு படத்தில் நகைச்சுவை ஜாம்பவான்கள் வடிவேலு, விவேக் அல்லது சந்தானம் என யாரேனும் நடத்திருந்தால் 100 நாட்கள் நிச்சயம்.

சமுதாய பிரச்சனையை பேசும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘அம்போ, பாவ் செஞ்ச தவறுக்கு, மீ என்ன பண்ண?‘ என்று சௌராஷ்டிரா மொழி பேசும் பெண்ணிற்கும் தமிழ் மொழி பேசும் ஆணிற்கும் பிறந்த மகன் கதாபாத்திரம் பேசும் வசனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் மற்றும் சௌராஷ்டிரா கலந்து அவன் பேசும்போது அவனுக்கு உண்டான சிரமத்தை இந்த வசனம் பிரதிபலிக்கிறது.

இதுவரை 6000-க்கும் மேற்பட்ட சௌராஷ்டிரா சமுதாய மக்களால் மட்டுமே பார்க்கப்பட்ட இக்குறும்படத்தில் கதைக்கரு அழகாக இருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் திரைக்களம் இன்னும் சிறப்பாக அமைத்திருந்தால் அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கும்.

‘ஒரு சமுதாயத்தின் அழிவிற்கு அடித்தளமாக இருப்பது, அம்மொழியின் அழிவாகும். இதுபோன்ற கலப்பு திருமணங்கள் ஏற்படுவதால், இருமொழிகளுமே அழிந்து, இரண்டும் கலந்த புதுமொழி ஒன்று உருவாகிவிடுகிறது. இதனால், அந்த மொழி சார்ந்த சமுதாயங்கள் அழிவதற்கு இதுபோன்ற கலப்பு திருமணங்கள் அடித்தளமாக அமைந்து விடுகின் றது. ஒரு சமுதாயத்தில் மொழியினால் ஏற்படும் அழிவு திரும்பப் பெற முடியாததாக இருப்பதால் இது போன்ற கலப்பு திருமணங்களை தவிர்ப்பதே எந்தவொரு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்‘ என்ற கருத்தை இப்படத்தின் மூலமாக இயக்குனர் தினேஷ் முன்வைக்கிறார்.

காதல் திருமணம் புரியும் சிலர், தொலைநோக்கு பார்வையோடு இல்லாமல் சுயநலமாக சிந்தித்து செயல்படுவதால் இதுபோன்ற பிரச்சனைகள் உருவெடுப்பதோடு மட்டுமல்லாமல், விரைவிலேயே பிரிய நேரிடுகின்றனர். சமுதாயத்தையும், தங்களின் சந்ததியினரையும் பற்றி சற்றே சிந்தித்து செயல்படுங்கள். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்த்திடுங்கள்.

Tags: News, Hero, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top