மதுரை மக்களை மகிழ்விக்கும் ‘Happy Street” திட்டம்!

மதுரை மக்களை மகிழ்விக்கும் ‘Happy Street” திட்டம்!

மதுரை மக்களின் மகிழ்ச்சிக்காகவென்றே இப்போது சாலையின் இரண்டு முனைகளையும் முழுவதுமாக அடைத்து போக்குவரத்தை தடை செய்து, அந்த சாலையில் வசிக்கின்ற மக்களுக்கே மூனறு மணி நேரம் முழுவதும் சாலையை உரித்தாக்குகின்றது மதுரை மாநகராட்சி.

அப்போது அந்த சாலையில் வசிக்கின்ற மக்கள் சர்வ சுதந்திரம் அடையப்பெற்று, அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களை, விளையாட்டுக்களை, கொண்டாட்டங்களை அவர்கள் தெருவிலே யாருடைய அனுமதியுமின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த சந்தோஷ சாலைக்கு வித்திட்டவர் மக்களின் மகிழ்ச்சியை மட்டுமே மனதிலே நிறுத்தி பணி செய்துவரும் நம் மதுரை மாநகராட்சியின் ஆணையர் / தனி அலுவலர் திரு.சந்தீப் நந்தூரி அவர்கள்தான்.

மதுரை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த “சாலை சந்தோஷம்” அல்லது “ஹேப்பி ஸ்டிரீட்” என்னும் திட்டமானது, மதுரையின் ஏதாவது ஒரு சாலையில் வசிக்கின்ற மக்கள், “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற அடிப்படையின்கீழ் ஒரு மூன்று மணி நேரத்திற்கு அதாவது காலை 06.00 மணி முதல் காலை 09.00 மணி வரை அந்தச்சாலையில் வசிக்கின்ற அனைவரும் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏதாவது ஒரு சாலை தேர்வு செய்யப்பட்டு அந்த சாலைக்கு இந்த பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டு அங்குள்ள மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி கடலில் திளைத்திட அனுமதிக்கப்படுகின்றது. அந்த சாலையில் வசிக்கின்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் மூன்று மணி நேரம் முழுவதும் ராஜாக்களைப் போல் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் அவர்களின் வழியிலேயே செய்து மகிழ்வதற்கு அற்புதமான ஒரு சந்தர்ப்பத்தை மதுரை மாநகராட்சி முதன்முறையாக புதுமையான வகையிலே ஏற்பாடு செய்திருக்கின்றது. இது வேறு எந்த நகரத்திலும் இதுவரையிலும் செய்யப்படாத ஒரு மக்கள் திட்டம் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

அன்றாட வாழ்க்கையில் அலைந்து திரிந்து நொந்து போயிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இந்த சந்தோஷ சாலை திட்டம் “மகிழ் மாளிகையின் தலைவாசல்” என்றே சொல்லலாம். குழந்தைகளும் பெரியவர்களும் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு மூன்று மணி நேரத்திற்காவது தங்களுடைய கஷ்டங்களையும் துயரங்களையம் தள்ளிவைத்து கவலைகளை மறந்துவிட்டு சந்தோஷமாக இருப்பதற்கு ஏதுவாகின்றது. அத்துடன் பெரியவர்களின் மனச்சுமை குறைந்து, மன அழுத்தங்களும் தவிர்க்கப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சந்தோஷ சாலை திட்டம் முதன்முதலாக மதுரை மாநகராட்சியால் அண்ணா நகர் 80 அடி சாலையில் நடத்தப்பட்டு அந்த சாலையின் மக்கள் அனைவரும் குதூகலப்படுத்தப்பட்டார்கள். அந்த சமயத்தில், போக்கு வரத்து சாலை முழுவதும் நிறுத்தப்பட்டிருந்ததால் வாகன புகைகள், தூசுகள் முதலியவை இல்லாமல் அந்த சாலையின் மக்கள் சுத்தமான காற்றை சில மணி நேரங்களுக்காவது சுவாசிக்க முடிந்தது. ஜன நெருக்கடி நிறைந்த மதுரை மாநகரில் புகை மாசில்லாத காற்றினை சுவாசிப்பது என்பது அபூர்வம் தானே. இந்த திட்ட செயல்பாட்டு நேரத்தில் குழந்தைகள் எல்லோரும் கிரிக்கெட், ஸ்கேட்டிங், சைக்கிளிங், சிலம்பம், கூடைப்பந்து, பல்லாங்குளி, உடற்பயிற்சிகள், பேட்மின்டன், நடனங்கள். யோகா முதலியவற்றில் ஈடுபட்டார்கள். மற்றொரு புறம் இசை, நடனம், ஏரோபிக்ஸ், கேம் ஷோ முதலான நிகழ்ச்சிகள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மகிழ்ச்சியோடு மேற்கொள்ளப்பட்டது.

பெரியவர்களையும் குழந்தைகளையும் குதூகலப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் ஆணையர் / தனி அலுவலர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களும் பல்வேறு விளையாட்டுகளில் தாமே உற்சாகத்துடன் பங்கு கொண்டார். நிகழ்ச்சியின்போது பலரும் ஆணையர் / தனி அலுவலர் அவர்களை நேரில் பார்த்து இவ்வாறான அடுத்த நிகழ்ச்சி எங்கு எப்போது நடத்தப்படும் என்று ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள். சந்தோஷ சாலை திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்று எல்லோரும் தெரிவித்தார்கள். ஆயினும் அடுத்த மகிழ்ச்சியடைய போகும் சாலை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றே தெரிகின்றது.

சந்தோஷ சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மழை நீர் சேகரிப்பு திட்டம், குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகிய சமூக தகவல்களும் கலந்து கொண்டவர்களிடத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு இவென்ட்ஸ் நிறுவன நிர்வாகிகள், ICICI வங்கி, போத்தீஸ் நிறுவனம், டிகாத்லான், ரேடியோ மிர்ச்சி, விஷால்-டி-மால் ஆகியவை இணைந்து செயல்பட்டன.

Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top