உண்மையான 'பாகுபலி'

உண்மையான \'பாகுபலி\'

இன்று உலகமே பாகுபலி-2 படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வெளியான படங்களில் .இது வரை இந்தப் படம்தான் அதிகமான வசூலை வாரிக்குவித்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இல்லை...இல்லை...உலக அளவில் இதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனையை பாகுபலி-2 படம் முறியடித்துள்ளது. டைட்டானிக் பட வசூலை எல்லாம் ஓரம் தள்ளி உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது இப்படம். முதல் பாகம் வெளி வந்து வெற்றி பெற்ற பின்னர், மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த இப்படம், எல்லோரும் எதிர்பார்த்ததை விட இமாலய வெற்றியைப் பெற்றிருக்கிறது. சரித்திரப்படம் எடுத்தால் ஓடுமா, என்ற கேள்விக்கு, விடை இதோ, சரித்திரத்தைத்தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். மாயாஜாலத்தை அல்ல, என்ற லாஜிக், இனிவரும் காலத்தில், இன்னும் அதிகமான சரித்திரப் படங்களை நமக்கு காண வாய்ப்பு கிடைக்கும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இந்த பாகுபலி என்ற பெயரை, ஒரு கேரக்டராக சந்திரமௌலி எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. மொழி தெரியாதவர்கள் கூட, இந்தப் பெயரை உச்சரிக்கும் போது கூட கம்பீரமாகத் தான் இருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தப் பெயர் மிகப்பிரபலம். ஆம்! சமண தீர்த்தங்கரர்களில் ஒருவரும், இந்த மதத்தை உருவாக்கிய ஆதிநாதரின் மகன் தான் இந்தப் பாகுபலி. கர்நாடக மாநிலம் சரவணபௌகோலாவில் இவருக்கு இப்போது, மிகப்பிரம்மாண்ட சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் இவரது பெயர் கோமதீஸ்வரர். இன்றும் சமணர்கள் இவரைத் தெய்வமாக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாகுபலியின் பழமையான சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சமணர்கள் வாழ்ந்த மலையில், பிற தீர்த்தங்கரர்களான பார்சுவநாதர், முக்குடைநாதர், ஆதிநாதர் ஆகியோரது சிற்பங்களுடன் இவருக்கும் சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். மிகக் குறிப்பாக, மதுரைக்கு மேற்கே உள்ள நாகமலைக்குத் தெற்கே உள்ள கீழக்குயில்குடியில் அமைந்துள்ள மலையின் மேலே, பேச்சிப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள இயற்கையான சுனைக்கு முன்பாக, எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களில் இவருக்கும் சிற்பம் உண்டு. ஒரு ஃபிரேமிற்குள் வைத்திருப்பதைப் போல், மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட புடைப்புச் சிற்பத்தில் மிகப்பெரிய செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.

நிர்வாண கோலத்தில் நின்ற நிலையில் தியான நிலையில் இருக்கிறார் பாகுபலி. அவருக்கு இரண்டு பக்கங்களிலும், அவரது சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகியோர் நின்றிருப்பார்கள். அவர்களுடைய தந்தை ஆதிநாதர் சொன்ன சேதியை, பாகுபலியிடம் சொல்வதற்காக வந்து நிற்கிறார்கள். பாகுபலியில் வலது புறம் மேலே, ஒரு அரக்கன், அவரது தவத்தைக் கலைப்பதற்காக, புயலை வாய் வழியாக ஊதிக் கொண்டிருக்கிறான். இடது புறத்தில், மற்றொரு அரக்கன், பெரிய பாறையை எடுத்து அவர் மீது வீச முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் ஒரு அரக்கன், இவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டு, அது ஏதும் பலிக்காமல் போய் விடவே, அவரிடம் மன்னிப்பு கேட்டு, பாகுபலியின் காலடியில் விழுந்து சரணடைந்து கிடக்கிறான். கி.பி.8-ம் நூற்றாண்டில், இந்தப் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சைவத்தின் பொருளாக, உருவ வழிபாடு தொடங்கப்பட்டவுடன், சமணத்தின் செல்வாக்கு சரியத் துவங்கியது.

அதனால், அதுவரை உருவ வழிபாட்டைப் பற்றிச் சிந்திக்காத சமணர்கள், தங்களது குருமார்களான தீர்த்தங்கரர்களுக்காக உருவ வழிபாட்டைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் வாழும் மலைகளில் புடைப்புச் சிற்பங்களாக, சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களில் முதலிடம் இந்தப் பாகுபலிக்குத் தான். கீழக்குயில்குடியில், இந்த சிற்பம் வடிக்கப்பட்ட பின்னர், மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தது, இந்தச் சமணர் மலை. சமணர்களின் பல்கலைக் கழகமாக இருந்தது. இதனால், கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான சமணர்கள் இந்த மலைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே பாகுபலி என்ற பெயர் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், புகழ்மிக்கதாகவும் இருந்திருக்கிறது. இப்போது திரைப்படமாக வந்து ஆயிரக்கணக்கான கோடி பணத்தை அள்ளிக்குவத்துத் தந்து கொண்டிருக்கிறது.

உண்மையானா பாகுபலிக்கும், நிழலான பாகுபலிக்கும் புகழ் என்னும் அர்த்தமுள்ள கல்வெட்டுச் சரித்திரம் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.

Tags: News, Art and Culture, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top