தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை செயல்படுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியானதற்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்புமொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது. 
 
2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய்மொழியையும், விருப்பப்பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி திட்டத்தை அமல்படுத்த இருந்தது. இதற்கு அப்போதே தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதன் மூலம் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை மத்திய அரசு திணிக்கபார்க்கிறது என்று கண்டனங்கள் எழுந்தது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை கொண்டு வரலாம் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top