சசிகலா சொத்துக்கள் முடக்கம்!

சசிகலா சொத்துக்கள் முடக்கம்!

பினாமி பெயரில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சசிகலாவை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. வழக்குகளும், சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன
 
சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர், பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
 
2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
 
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர்.
 
பின்னர் இரண்டாவது கட்டமாக, சசிகலா தரப்பினர் 2003-2005ஆம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கினர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை வருமானத்துறையினர் முடக்கியிருந்தனர்.
 
மூன்றாவது கட்டமாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூர் நிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் நிலம் என மொத்தம் சுமார் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன. இதில், கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு, 1,500 கோடி மற்றும் சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், இந்த சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
 
இதற்கான நோட்டீஸ், அந்தந்த சொத்துகளின் வாயில்களில் ஒட்டப்பட்டன. சொத்துகளை கையகப்படுத்தியது தொடர்பாக அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top