மழை பெய்தாலும் பலனில்லை!!!

மழை பெய்தாலும் பலனில்லை!!!

மதுரைக்குள் கடந்த செப்.8-ஆம் தேதி ஒரே நாளில் 108 மி.மீ. மழை பொழிந்தும் கூட, அந்த நீர் யாருக்கும் பயனின்றிப் போய்விட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். ஒட்டு மொத்த மதுரை மாவட்டத்தின் சராசரி மழைப் பொழிவு அன்று ஒரு நாளில் 23.42 மி.மீ.-ஆக இருந்தும்கூட, இந்த மழைநீர் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு கூட பயன்படவில்லை என்கிறார்கள் நீரியல் வல்லுநர்கள்.

நில மேற்புறம் ஓடிய தண்ணீர் அனைத்தும் எங்கும் சேகரிக்க இயலாமல், வீணாய்ப் போய்விட்டது. மதுரையைச் சுற்றியிருந்த பெரும்பாலான நீர்நிலைகள் இன்றைக்குத் தூர்ந்துபோய், ஆக்கிரமிப்பின் பிடியில் சீரழிந்து கிடப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் நீரியல் வல்லுநர்கள். நீண்ட கால அடிப்படையில் இதற்கொரு செயல்திட்டம் இல்லாவிட்டால் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகும் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி இதுகுறித்து கூறியதாவது:

'மதுரை நீர்நிலைகளின் நகரமாகத்தான் பண்டைய வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளன. தற்போது மதுரை மாநகராட்சியால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதி வரை மதுரையில் ஏறக்குறைய 190 நீர்நிலைகள் இருப்பதாக கணக்கெடுப்பு விபரங்கள் சொல்கின்றன.

அவற்றுள் ஏறக்குறைய 40 நீர்நிலைகள் முற்றிலுமாக மாற்றம் அடைந்திருக்கின்றன. திட, திரவக் கழிவுகளால் முற்றிலும் தூர்ந்துபோய்விட்டன. தற்போது இருக்கக்கூடிய அனைத்து நீர்நிலைகளிலும் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது திடக்கழிவுகள் சேர்ந்தோ சரியான பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இதனால் மழை பெய்யும் காலங்களில் இந்த வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் நீர்நிலைகளுக்குச் செல்ல இயலாமல் போய்விடுகிறது.

மதுரை மாநகருக்குள் மட்டும் நிலத்தடி நீரின் மட்டம் ஆயிரம் அடிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. பூமியில் விழுகின்ற மழைநீர் அனைத்தும் பூமிக்குள் இறங்கினால் மட்டுமே நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தார் சாலைகளும், காங்கிரிட் தளங்களும், பேவர் பிளாக் போன்ற செங்கற் சாலைகளும் அந்த வாய்ப்பையும் முற்றிலுமாக தடுத்துவிடுகின்றன.

கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசு, நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக மழைநீர் சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அதன் தற்போதையை நிலை கேள்விக்குரியதாக மாறிவிட்டது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் அவற்றைச் சேமிப்பதற்கான கட்டமைப்புத் திறனை மேம்படுத்தத் தவறிவிட்டோம்' என்றார்.

இது போன்ற இடையூறுகளின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாநகருக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அரைமணிநேரம் பெய்யக்கூடிய மழையில், மதுரையின் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கிவிடுகின்றன. இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்றும் வல்லுநர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

கடந்த 1992-ஆம் ஆண்டு பெய்த பெருமழை காரணமாக மதுரை மாவட்டத்தைச் சுற்றியிருந்த சில கண்மாய்கள் நிரம்பி, செல்லூர் கண்மாய் உடைப்பெடுத்தது. இதனால் மதுரையின் வடபகுதி கடும் வெள்ளப்பாதிப்பிற்கு ஆளானது. காரணம் தண்ணீர் விரைந்து செல்லும் வாய்க்கால்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் வெளியேற வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியதுதான் என்பதை நீரியல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆகையால் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு நீராதாரத்திற்கு பெரும் சவால் என்றால், அது மற்றொரு வகையில், வெள்ளம் வடிவதற்கு உரிய வழிவகையின்றி, மதுரையில் பெரும் வெள்ளச்சேதமும் இனி வருங்காலத்தில் தவிர்க்க முடியாததாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

வண்டியூர், மாடக்குளம், செல்லூர், தென்கால் இவையெல்லாம் தற்போது ஓரளவிற்கு உயிர்ப்புடன் திகழ்கின்ற பெரிய கண்மாய்களாகும். அதே போன்று பல்வேறு சிறிய கண்மாய்களும், அவற்றின் வரத்துக் கால்வாய்களும் மிகப் பெரிய அளவில் சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றை முழுவதுமாகக் கணக்கெடுத்து, அவற்றைச் சீர் செய்வது, மதுரையில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வெள்ளப்பாதிப்பிலிருந்து தவிர்க்க செய்யும்.

மேலும், 'மதுரையின் பண்டைய வரலாற்றுப் பெயர் என்பது 'மாடக்குளக்கீழ் மதுரை' என்றே பதிவாகியுள்ளது. ஒரு நீர்நிலையின் அடிப்படையில் மதுரையின் பெயர் அமைந்துள்ளதை நோக்கும்போது, நீர்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்த மக்களே இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு சின்னச் சின்ன விஷயங்களிலும் நீர்நிலை மேம்பாட்டிற்கு தம்மால் ஆன முயற்சியை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும். அது போன்ற உணர்வுடன் மழைநீர் சேகரிப்பிலும், நீர்நிலைகள் மேம்பாட்டிலும், சுற்றுச்சூழல் குறித்த கூடுதல் அக்கறையோடும் செயல்பட்டால், மதுரையின் எதிர்காலத்தை காக்க முடியும். 

உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மட்டுமன்றி நம் ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது' என்று கூறினார்.

(Whatsapp 

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top