அலங்காநல்லூர் போராட்டக்காரர்களை தடியடி செய்து கட்டுக்குள் கொண்டுவந்த போலீஸ்
Posted on 23/01/2017

அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றிவருகிறார்கள்.
வரும் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், போராடிய மக்கள் இனி கலைந்து செல்லலாம் என்றும் கூறியுள்ள ஊர் கமிட்டியினர், போராட்டக்காரர்கள், மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்த தகவல் ஆங்காங்கு உள்ள போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மேலூரில் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதேபோல ஒரு சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திவரும் பிற ஊர் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் ஊர்கமிட்டி முடிவை ஏற்கவில்லை.
நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துவிட்டனர். இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். கைது செய்து வேனில் ஏற்றுகிறார்கள். ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய ஊரான அலங்காநல்லூரில் நடைபெற்ற தடியடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: News, Madurai News, Art and Culture