மாநகராட்சி பணிகள் பாதிப்பிற்கு காலி பணியிடங்கள் காரணம்!!!

மாநகராட்சி பணிகள் பாதிப்பிற்கு காலி பணியிடங்கள் காரணம்!!!

மதுரை மாநகராட்சியில் நிர்வாக முறைகளில் மாற்றம் இல்லாததால், பல பிரிவுகளின் பணிகளை பிற அலுவலர்கள் செய்யும் நிலை உள்ளதால் காலவிரையம், செலவினம், பொதுமக்கள் சேவை பெறுவதில் தாமதம் என பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன.

மாநகராட்சியின் 100 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அவை உதவி கமிஷனர், நிர்வாக அலுவலர், உதவி வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர், இளநிலை பொறியாளர், வரி தண்டலர், பதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர் என்ற நிலையில் பணிகள் நடந்து வருகின்றன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட மாநகராட்சியின் அனைத்து பிரிவுகளிலும் தகுதி இல்லாத நபர்கள் பணியில் இருப்பதால் பணிகள் தடுமாற்றமடைகின்றன.

100 வார்டுகளிலும் வரிதண்டலர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 24 பேர் மட்டுமே தகுதியானவர்கள். மற்றவர்கள் கீழ்நிலை பணிகளில் இருந்து பல்வேறு சூழல்களால் பொறுப்பு பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள். பல ஆண்டுகளாக இப்பணியை தொடர்கின்றனர். இதே நிலை உதவி பொறியாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் உள்ளது. பணிகளின் பொறுப்பு, முக்கியத்துவம் தெரியாத நிலையில் இவர்கள் பணி் தொடர்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

வார்டுகளில் குடிநீர், பாதாள சாக்கடை, ரோடு, வரி விதிப்பு, வரி வசூலிப்பு, சுகாதாரம், கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் வார்டில் ஒரு அலுவலரை தொடர்பு கொள்ளும் நடைமுறை சில நகராட்சியில் உள்ளது. இதனால் குறிப்பிட்ட ஒரு அலுவலரால் அந்த வார்டில் உள்ள அனைத்து நிறை, குறைகளை அறிய முடியும். ஒவ்வொரு தேவைக்கும் பல்வேறு அலுவலர்களை மக்கள் தேடி அலையும் நிலை தவிர்க்கப்படும்.

வரித்தண்டலர்கள் இருந்தாலும் சந்தைகளின் வருவாயை பெறவும், நிலுவை வரிகளை வசூலிக்கவும், அபாயகரமான பொருட்கள் தொடர்பாக மேற்பார்வையிடவும் தனித்தனி அலுவலர்கள் ஒரே வார்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மாநகராட்சிக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுகின்றன.

வருவாய், சுகாதாரம், பொறியியல் பிரிவு காலிப்பணியிடங்களால் ஒரு வார்டில் பணிபுரிய வேண்டிய உதவி பொறியாளர், சுகாதார அலுவலர் பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக நான்கு, ஐந்து வார்டுகள் வழங்கப்பட்டு வருவதாலும் அன்றாட பணிகளிலும், வளர்ச்சி பணிகளிலும் பின்னடைவு ஏற்படுகிறது. மாநகராட்சி பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், அதன் பணிகள் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அதிகாரிகளை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்த கமிஷனர் அனீஷ்சேகர் முன்வர வேண்டும்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top