புளூவேல் அசுரனால் பலியாகும் பிள்ளைகள்... கதறும் பெற்றோர்கள்...

புளூவேல் அசுரனால் பலியாகும் பிள்ளைகள்... கதறும் பெற்றோர்கள்...

நீலத்திமிங்கலம் எனப்படும் புளூவேல் அரக்கனின் கோரப்பசிக்கு இரையாகியிருக்கிறான் மதுரையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். இது தமிழகத்தில் பெற்றோர்களை பதைபதைக்க வைத்துள்ளது. விளையாட்டு வினையாகும் என்பார்கள். புளூவேல் சேலஞ்ச் எனப்படும் இணையதள விளையாட்டு உலக அளவில் குழந்தைகளை அடிமையாக்கி வருகிறது. இதையடுத்து, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புளூவேல் விளையாட்டுக்கான தொடர்பு முகவரிகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. புளூவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து தமிழக போலீசாரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடந்த 2013ம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய விளையாட்டு புளூ வேல். சமீபத்தில் இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இந்த இணைய விளையாட்டில் 50 நிலைகள் வரை உள்ளது. இந்த விளையாட்டு படிப்படியாக 50வது படியை எட்டும் போது தற்கொலைக்கு கொண்டு சென்றுவிடும்.

புளூவேல் சேலஞ்ச் முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான இந்த விளையாட்டில் நுழைந்து விட்டால் மீள்வது கடினம். ஒரே நேரத்தில் பத்து சாக்லேட்டுகளை வாயில் திணிக்க வேண்டும் என்று கட்டளையிடும், அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் பாராட்டுகள் குவியும். இது விளையாடுபவரை மெஸ்மரைஸ் செய்து அடிமையாக்கி வைத்துக்கொள்ளும். 

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வைத்தல், அவர்கள் அனுப்பும் அமானுஷ்ய காட்சிகளை பாரக்க வைத்தல், திமிங்கலத்தின் படத்தை விளையாடும் குழந்தைகளின் கை மற்றும் கால்களில் வரைய செய்தல் உள்ளிட்டவை இந்த விளையாட்டில் சவால்களாக இடம்பெற்றுள்ளது. படிப்படியாக தற்கொலை வரை கொண்டு செல்லும். 

புளூவேல் விளையாட்டு ஊடுருவலை தடுக்கும் வகையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது. சைபர் க்ரைம் மூலம் இந்த விளையாட்டை கண்காணிக்க முடியாது. எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பது காவல்துறையினரின் எச்சரிக்கை.

இது போன்ற விளையாட்டுகளில் யாரும் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் சென்னை மாநகர போலீஸ் சார்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாணவர்கள் பள்ளியில் உறங்குதல், அவர்களின் கை கால்களில் காயங்கள் இருப்பின் அதற்கான காரணங்களை விசாரிப்பதுடன் அவர்களை தீவிரமாக கண்காணிப்பது அவசியம். அவர்களின் நடவடிக்கைகளை வகுப்பறையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் காவல்துறை ஆணையரின் அறிவுறுத்தலின்படி போலீசார் அனைத்து வகைகளிலும் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் செந்தில்குமார் கூறியிருந்தார்.

தமிழகத்தில் இந்த விளையாட்டினால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக மாணவர் ஒருவர் புளூவேல் விளையாட்டுக்கு பலியானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மொட்டை மலை கிராமத்தில் வசித்து வந்தவர் விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக வீட்டிலும், உறவினர்களுடனும் எதுவும் பேசாமல் ஒருவிதமான குழப்பமான மனநிலையோடு விக்னேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளூவேல் விளையாட்டை விளையாடியுள்ளார். ஆட்டத்தின் முடிவில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

விக்னேஷ் தனது இடது கையில் புளுவேல் எனப்படும் நீலத் திமிங்கலத்தின் படத்தையும், விளையாட்டின் விபரீதம் குறித்தும் எழுதி வைத்துள்ளார். நன்றாக படிக்க கூடிய மாணவன் வலைதளத்தின் மூலமாக விஷம விளையாட்டினால் உயிரிழந்ததைக் கண்டு விக்னேஷின் பெற்றோர் இப்போது கண் கலங்கி நிற்கின்றனர்.

இதுபோல பல உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாகும். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்களும் கண்காணியுங்கள்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top