பல கரங்களின் பசியில்லா மதுரை!

பல கரங்களின் பசியில்லா மதுரை!

இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் உயிரோடு இருக்கச்செய்வது உணவுதான். உடுக்க உடையும், இருக்க இடமும் கூட இல்லாமல் உயிர் வாழ முடியும். ஆனால் உண்ண உணவின்றி வாழவே முடியாது.  இன்றும் உலகில் பல்வேறு இடங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 21,000 பேர் மரணமடைகிறார்கள் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

இன்று நம்முடைய ஊரிலேயே உணவிற்காக யாசகம் கேட்கும் பலரை நாம் கண்டு வருகிறோம். ஒருசிலரோ கை கால் நன்றாக இருந்தும் யாசகம் கேட்கிறானே என்று அவர்களை காணாமல் செல்வதுண்டு. ஒரு மனிதன் உண்டு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அவனால் வேலையே பார்க்க முடியும். இதனை முன் எடுத்துதான் பசியில்லா மதுரை திட்டம் உருவாகியுள்ளது.

‘நாம் கொடுக்கும் ஒரு ஐம்பது ரூபாய் இரண்டு ஏழைகளின் பசியைப் போக்கும்’ என்கிற ஒரு திட்டத்தை மதுரை மாநகராட்சியும் பல கரங்கள் அறக்கட்டளையும் இணைந்து மதுரையில் உண்மையாகவே உணவிற்கு வழியின்றி கஷ்டப்படுபவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது. பயிற்சி ஆட்சியர் திரு. விஷ்ணு சந்திரன் அவர்களின் இத்திட்டத்தை பல கரங்கள் அறக்கட்டளை செயலாற்றியுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடு குறித்தும், இத்திட்டத்தினால் ஏழைகளுக்கு கிடைக்கும் பலன் குறித்தும் அறிந்துகொள்ள “பல கரங்கள்” அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி. அலிமா பானு சிக்கந்தர் அவர்களிடம் கேட்ட பொழுது:

‘உணவுச் சேவை செய்யும் பல தொண்டு நிறுவனங்கள் மதுரையில் இயங்கி வருகின்றன. இதனால் இந்த திட்டம் என்ன புதியது என பலருக்கும் ஒரு கேள்வி எழும்பும். ஏழ்மையில் வாடுவோருக்கு ஒருவேளை தரமாக உணவளிக்க வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். மதுரையில் இன்னும் நாம் அறியாத பல இடங்களில் அன்றாட உணவிற்காக பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மேலும் விவசாயத்தில் வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, பண மதிப்பிழப்பு போன்றவை ஏழ்மையில் உள்ளோரை மேலும் ஏழையாக்கியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோராகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வேலை யாரும் அளிக்க முன்வராத ஒரு காரணத்தில்தான் யாசகம் கேட்கிறார்கள். ஒரு மனிதனுக்கு சரியான நேரத்தில் உணவு மட்டும் கிடைத்தால் போதும், அவனுக்குள் வேலைக்கு செல்ல வேண்டுமென்கிற ஒரு உத்வேகம் வரும்.

மதுரையில் பயிற்சி ஆட்சியராக இருக்கும் திரு. விஷ்ணு சந்திரன் அவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நம் மதுரை மாவட்ட ஆணையர் திரு. சந்தீப் நந்தூரி அவர்களிடம் பேசியுள்ளார். அவர்கள் எங்களை இத்திட்டத்தை செயல்படுத்தும்படி அறிவுறுத்தினர். எனவே, ஒரு சிலரின் உதவியோடு ‘ஹங்கர் மேப்’ என்னும் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் யாருக்கு உணவு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்பதை கண்டறியத் தொடங்கினோம். எனினும் மதுரையில் மட்டுமே பசியால் வாடுவோர் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். அதனால் சட்டென இந்த திட்டத்தை மக்களிடையில் கொண்டு போக முடியாது.

எனவே, இதற்கான முதற்கட்டமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை தேர்வுசெய்து கடந்த ஏப்ரல் 29-ம் தேதி முதல் உணவளித்து வருகிறோம். அரசு ராஜாஜி மருத்துவமனைக்கே நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். அதில் சிகிச்சைக்காக சுமார் ஆயிரம் பேர் தினம்தினம் உள் நோயாளிகளாக சேர்க்கப்படுகிறார்கள். பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு வருவோர் ஏழ்மையில்தான் இருப்பார்கள். அதில் நோயாளிகளுக்கு அரசாங்கமே உணவு வழங்கினாலும் அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கு உணவு வழக்கப்படவில்லை. அதில் கொஞ்சம் பணம் வைத்துள்ளவர்கள் வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருகிறார்கள். எனினும் ஒரு சிலர் அதையும் வாங்க முடியாமல் பசியில் வாடுகிறார்கள். எனவே, தொடக்கமாக அன்றாடம் சுமார் ஐந்நூறு பேரின் பசியை போக்கும்வகையில் மதிய வேளையில் உணவு வழங்கி வருகிறோம்.

இந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டுவரும். இதில் நாள் ஒன்றுக்கு ஒரு உணவகம் என்கிற வகையில் முப்பது நாட்களுக்கு முப்பது உணவகம் உணவளிக்கின்றனர். இந்த திட்டத்தை மதுரை மாநகராட்சி மற்றும் பலகரங்களால் மட்டுமே செயல்படுத்த முடியாது. இதற்கான பணத்தேவை என்பது அதிகம். ஆனால் ஒருவர் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தரமான உணவோடு இருவரின் பசியைப் போக்க முடியும். இதற்கு நன்கொடை அளிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி கனரா வங்கியில் ‘பசி இல்லா மதுரை’ என்கிற கணக்கினைத் துவங்கியுள்ளது. அத்தோடு தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மக்களிடையில் அதிகம் பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ’ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க்’ மூலமாகவும் பேடீயம் மூலமாகவும் நன்கொடை அளிக்கலாம். இதற்காக நம்முடைய போனில் ஏர்டெல் ஆஃப் பதிவிறக்கம் செய்து அதில் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக 9994260606 என்கிற எண்ணிற்கு செலுத்தினால் அது நேரடியாக வங்கி கணக்கை எட்டுவிடும். இனி வரவிருக்கும் நாட்களில் எந்த ஒரு கடையிலும் இந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்தாலே போதுமானது.’ என கூறினார்.

இந்த ‘பசி இல்லா மதுரை’ திட்டத்தின் துவக்க நிகழ்வு கடந்த ஏப்ரல் 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆணையர் திரு. சந்தீப் நந்தூரி, பயிற்சி ஆட்சியர் திரு. விஷ்ணு சந்திரன், ராஜாஜி மருத்துவமனையின் டீன் திரு. வைரமுத்துராஜு, பலகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி. அலிமா பானு சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய ஆணையர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள், ‘இந்த திட்டமானது நோயாளியை கவனித்துக்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இத்திட்டம் மேலும் விரிவடைந்துக் கொண்டே இருக்கும். அத்தோடு திரு.விஷ்ணுசந்திரன் அவர்களின் இந்த யோசனையும் பலகரங்களின் முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது’ என கூறினார்.

மேலும் விபரங்களுக்கு: 9629441147

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top