விளம்பரப் பதாகைகளை வைத்த அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி மனு

விளம்பரப் பதாகைகளை வைத்த அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி மனு

மதுரையில் விளம்பரப் பதாகைகளை நிறுவிய அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை தல்லாகுளம், திடீர் நகர், தெற்குவாசல், செல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோரால் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் இந்த விளம்பரப் பதாகைகளை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பதாகைகளை நிறுவக்கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையரிடம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்தேன்.

ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. விளம்பரப் பதாகைகளை வைத்தவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்.  எனவே, எனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, பொது இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, விளக்குத்தூண் பகுதியில் செல்லும்போது, பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் தனது ஆதரவாளர்களின் வாகனங்களுடன் சென்றுள்ளார்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், மனுதாரரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியது. அதற்கு போலீஸார் தரப்பில், மின்னஞ்சல் மூலம் எவ்வித புகார்களும் பெறப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், மனுதாரரின் புகார் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top